சந்திரயான்-2 லேண்டர் கருவி தொடர்பு துண்டிப்புக்கு காரணம் என்ன? நெல்லை அறிவியல் மைய அதிகாரி விளக்கம்


சந்திரயான்-2 லேண்டர் கருவி தொடர்பு துண்டிப்புக்கு காரணம் என்ன? நெல்லை அறிவியல் மைய அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 7 Sep 2019 10:30 PM GMT (Updated: 7 Sep 2019 8:21 PM GMT)

சந்திரயான்-2 லேண்டர் கருவி தொடர்பு துண்டிப்புக்கு காரணம் என்ன? என்று நெல்லை அறிவியல் மைய அதிகாரி முத்துக்குமார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை, 

பூமியில் இருந்து 4 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பி இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளனர். லேண்டர் கருவி நிலவில் தரையிறங்கும் நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. சந்திரயான்-2 பலவகையில், பலகட்ட சோதனைகள் நடத்தி, சோதனை முடிவுகளில் வெற்றி கண்ட பிறகே அனுப்பி வைக்கப்பட்டது. சந்திரயான்-2 பூமியில் தயாரிக்கப்பட்டாலும், நிலவை பற்றிய தகவல்களை கொண்டு அதற்கேற்ப வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. சேலம் அருகே நிலவில் இருப்பது போன்ற கற்களை எடுத்துச் சென்று கர்நாடகா மாநிலம் கலிக்கரை சோதனை கூடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. நிலவில் சுற்றி வரவேண்டிய ‘விக்ரம் ரோவர்’ கருவி நிலவின் அழுத்தத்தை அடிப்படையாக கொண்டு ஹீலியம் பலூன் கட்டி சோதனை நடத்தப்பட்டது. நம்முடைய விஞ்ஞானிகள் ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்துடன் கையாண்டு உள்ளனர்.

எலக்ட்ரானிக் கருவிகள் எப்போது தோல்வி அடையும் என்பதை கூற முடியாது. சந்திரயான்-2 ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் தற்போதும் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில் இருந்து பிரிந்து நிலவில் கால் பதிக்க சென்ற லேண்டர் கருவி, திடீரென்று தனது தகவல் தொடர்பை துண்டித்து விட்டது. லேண்டர் நிலவில் இறங்கிய பிறகு குறிப்பிட்ட மணித்துளிகள் கழித்து அதில் இருந்து ரோவர் என்ற கருவி பிரிந்து நிலவில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது ரோவர் ஆய்வு தகவல்களை, லேண்டருக்கும், லேண்டர் அந்த தகவல்களை ஆர்ப்பிட்டருக்கும் அனுப்பி வைக்கும், ஆர்ப்பிட்டர் தகவல்களை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அனுப்பும்.

நிலவின் சூழ்நிலை அடிப்படையில், நமது விஞ்ஞானிகள் பிறப்பித்திருந்த கட்டளைப்படி லேண்டர் கருவி நிலவில் கால்பதிக்க முயற்சி செய்தது. ஆனால் நிலவில் நாம் எதிர்பார்த்ததை விட லேண்டர் வேகமாக இறங்கி இருக்கலாம். நிலவை நெருங்கும் போது சாய்ந்த நிலையிலும், தரையை தொடுவதற்கு கீழே இறங்கும் போது தனது கால்களை விரித்த நிலையிலும் செல்லும். இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம். இந்த நேரத்தில்தான் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஒருவேளை நிலவில் சரியாக இறங்கி கால் பதித்து இருந்தாலும் தொடர்பு மட்டுமே கூட துண்டிக்கப்பட்டும் இருக்கலாம். 2 நாட்கள் கழித்து தகவல் அனுப்பும் வாய்ப்பும் உள்ளது. ஏனென்றால் பாதுகாப்பு கருதி ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், ரோவர் கருவி தாமதமாக தரைஇறங்கும் வகையில் உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு உரிய துல்லியமான காரணம் குறித்து, ஆய்வுக்குழு இறுதியாக தகவலை தெரிவிக்கும்.

லேண்டர் சரியாக தரைஇறங்கி, ரோவர் கருவி வெளியே வந்து நிலவில் ஆய்வு நடத்தி இருந்தால் அரிய, புதிய தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கும். நிலவின் மேற்பரப்பில் என்ன இருக்கிறது? என்று தெரிந்திருக்கும். சூரிய குடும்பம் தொடங்கிய காலத்தில் இருந்து நிலவின் மேற்பரப்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்றும் தெரிந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story