மைக்ரோசாப்ட் ஹோலோ லென்ஸ் 2


மைக்ரோசாப்ட் ஹோலோ லென்ஸ் 2
x
தினத்தந்தி 6 March 2019 9:10 AM GMT (Updated: 6 March 2019 9:10 AM GMT)

சாப்ட்வேர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஹோலோலென்ஸை உருவாக்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த லென்ஸானது இப்பிரிவில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தது. முந்தைய மாடலைக்காட்டிலும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. கண்ணாடியில் படங்கள் மிகத் தெளிவாக தெரிவது, வசதியான வடிவமைப்பு, கட்டுப்படுத்தும் வசதிகளில் மேம்பட்ட சவுகரியம், நீண்ட நேரம் செயல்படுவது போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. இதில் உள்ள பேட்டரி 3 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். இதனால் ஒரு நீள திரைப்படத்தை எவ்வித இடையூறுமின்றி பார்க்க முடியும். இதன் விலை சுமார் ரூ.2.5 லட்சம்.

தற்போது அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கும். மைக்ரோசாப்ட் இஷாப் மூலம் இதை வாங்க முடியும். ரியால்டி ஹெட்செட் எனப்படும் இதில் மைக்ரோ எலெக்ட்ரோமெக்கானிக்கல் சிஸ்டம் (எம்.இ.எம்.எஸ்.) டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 850 இயங்குதளம் உள்ளது. இது தவிர இதற்கனவே ஹோலோகிராபிக் பிராசஸிங் பகுதியும் உள்ளது. ஆடியோ வசதியை கட்டுப்படுத்த 5 வழி மைக்ரோபோன் வசதியும் இதில் உள்ளது.

இது தவிர ஆடியோ ஹார்டுவேர் தனித்தனியாக உள்ளது. இதில் ஐரிஸ் ஸ்கேனர் உள்ளது. இதனால் உரிமையாளர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். இதில் யு.எஸ்.பி. போன்ற சி போர்ட் உள்ளது. இதன் மூலம் சார்ஜ் செய்ய முடியும். இதில் 8 மெகா பிக்ஸெல் சென்சார் இருப்பதால் வீடியோ கான்பிரன்ஸ் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ள முடியும்.

அவரவர் முக அமைப்புக்கேற்ப கச்சிதமாக பொருந்தும் வகையிலும், அட்ஜெஸ்ட் செய்யும் விதமாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேபர் சேம்பர் தொழில்நுட்பம் உள்ளது. இதனால் மூச்சுக் காற்று உள்பகுதியில் ஆவியாக படிவது தடுக்கப்படும். மேலும் இதில் முதல் முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் டைனமிக்ஸ் 365 கைடுலைன்ஸ் தீர்வுகளை வழங்கும் வகையில் உருவாக்கியுள்ளது. இதனால் முதல் முறை இதைப் பயன்படுத்துவோருக்கு இது மிக எளிதாக இருக்க உதவியாக இருக்கும். விரைவிலேயே இது இந்தியாவிலும் அறிமுகமாகும் என தெரிகிறது. கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கும் எளிதில் பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் வடிவமைப்பு, டிசைன் உள்ளிட்ட பணிகளிலும் உங்கள் கை அசைவுகளுக்கேற்ப இதில் பிம்பங்கள் தெரியும். இதன் பயன்பாடுகள் பலப்பல. ஒவ்வொரு துறையினருக்கும் ஏற்ற வகையிலான பயன்பாடுகளைக் கொண்டுள்ளதால், இதை அனைத்துத் துறையினருமே வாங்கி பயன்படுத்தும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

Next Story