நெல்லை–கொல்லம் ரெயிலுக்கு தென்மாவட்ட ரெயில்களை இணைப்பு ரெயிலாக்க வேண்டும், பயணிகள் வலியுறுத்தல்


நெல்லை–கொல்லம் ரெயிலுக்கு தென்மாவட்ட ரெயில்களை இணைப்பு ரெயிலாக்க வேண்டும், பயணிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 July 2018 10:30 PM GMT (Updated: 30 July 2018 8:19 PM GMT)

நெல்லை–கொல்லம் ரெயிலுக்கு தென் மாவட்ட ரெயில்களை இணைப்பு ரெயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட நெல்லை ரெயில்நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் ரெயில் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலால் தென்மாவட்ட பயணிகள் அதிகம் பயனடைவர். இந்த நிலையில், நெல்லை–கொல்லம் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்க பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் மதுரையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 10.45 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது. செங்கோட்டை–கொல்லம் பாசஞ்சர் ரெயில் செங்கோட்டையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.40 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது.

கொல்லத்தில் இருந்து மாலை 5 மணிக்கு கோட்டயத்துக்கு பாசஞ்சர் ரெயில் சேவை உண்டு. அதேபோல, மாலை 6.55 மணிக்கு குருவாயூருக்கு ஒரு ரெயில் இயக்கப்படுகிறது. கொல்லம்–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் காலை 10.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.35 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

செங்கோட்டை–நெல்லை பாசஞ்சர் ரெயில் மாலை 3.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரெயிலுக்கு நெல்லை–திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயிலை இணைப்பு ரெயிலாக அறிவிக்கலாம். அத்துடன், நெல்லையில் இருந்து காலை 7.25 மற்றும் காலை 9.15 மணிக்கு தூத்துக்குடிக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கொல்லம் செல்ல வசதியாக இந்த ரெயில்களை நேரம் மாற்றி இணைப்பு ரெயிலாக இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியேராவிடம் தென்மாவட்ட பயணிகள் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


Next Story