தொழிற்சாலைகள் பயன்படுத்தும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்


தொழிற்சாலைகள் பயன்படுத்தும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
x
தினத்தந்தி 24 July 2018 10:00 PM GMT (Updated: 24 July 2018 7:08 PM GMT)

கோயம்பேடு, கொடுங்கையூரில் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அடுத்த ஆண்டு அமைய உள்ளது.

சென்னை,

தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஜி.பிரகாஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மாநில தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்), தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், இந்திய வர்த்தக சம்மேளனம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன் லிமிடெட், சென்னை உர நிறுவனம் மற்றும் மணலி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட உள்ள மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் (டி.டி.ஆர்.ஓ.) விலையை நிர்ணயிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் ஜி.பிரகாஷ் பேசியதாவது.

கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் மூலம் மூன்றாம் நிலை நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். இதில் நாள் ஒன்றுக்கு தலா 45 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யலாம். மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டும் இன்றி இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் கழிவு நீர் ஆகியவற்றையும் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தொழிற்சாலைகள் பயன்படுத்தலாம்.

மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின் தரம் அனைத்து வகையிலும் மிகுந்த உயர்ந்த அளவில் இருக்கும். மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் ஒரு கிலோ லிட்டர்(1000லிட்டர்) ரூ.120–க்கும், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் ரூ.18.40–க்கும், கழிவு நீர் ரூ.3–க்கும் தொழிற்சாலைகளுக்கு கொடுக்க தயாராக இருக்கிறோம். மின்சார கட்டணம், அதிக முதலீடு மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவற்றின் காரணமாகவே மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து தொழிற்சாலைகளை சேர்ந்த அதிகாரிகள், பிரதிநிதிகள் கேட்ட கேள்விகளுக்கு குடிநீர்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் செயல் இயக்குனர் டி.பிரபுசங்கர், பொறியாளர் இயக்குனர் ஜி.சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர்  ஏ.மலைச்சாமி மற்றும் பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story