அம்பத்தூரில் புதிய நீதிமன்ற கட்டிட பணிகள் தொடங்கப்படுமா?


அம்பத்தூரில் புதிய நீதிமன்ற கட்டிட பணிகள் தொடங்கப்படுமா?
x
தினத்தந்தி 10 April 2018 11:46 PM GMT (Updated: 10 April 2018 11:46 PM GMT)

அம்பத்தூரில் புதிய நீதிமன்றம் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒரு வருடமாகியும் இதுவரையில் பணிகள் தொடங்கப்படவில்லை. பணிகளை தொடங்க வேண்டுமென பொதுமக்களும், வக்கீல்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் 1987-ல் இருந்து இயங்கி வருகிறது. இந்த நீதிமன்ற வளாகத்தில் நடுவர் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் உள்ளிட்ட 3 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களுக்கு வழக்கு விசாரணைக்காக தினமும் சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வக்கீல்கள் மற்றும் போலீசார், அரசு அதிகாரிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நீதிமன்ற வளாகத்திலேயே வக்கீல்களாக 60-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர், ஆவடி, முத்தா புதுப்பேட்டை, திருமுல்லைவாயல், டேங்க் பேக்டரி ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலைய வழக்குகள் இந்த நீதிமன்றத்தில்தான் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் இந்த நீதிமன்ற வளாகத்தில் கழிப்பிடம், பொதுமக்கள் ஓய்வு அறை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாய்தள பாதை, உணவகம், குடிநீர் என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் அங்கு வரும் வக்கீல்கள், பொதுமக்கள், போலீசார் என அனைத்து தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய நீதிமன்ற வளாக கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்ஸாண்டர் இது குறித்து கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

அதன்படி உடனடியாக ரூ.2 கோடி செலவில் புதிய நீதிமன்றம் கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இயங்கி வரும் நீதிமன்ற கட்டிடத்தினை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஆனால் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இதுவரையிலும் புதிய நீதிமன்ற கட்டிட பணிகளுக்கான எவ்வித பூர்வாங்க பணிகளும் இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தாலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

இந்த நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக தற்போது உள்ள நீதிமன்ற கட்டிடத்தை இடிக்க வேண்டியது உள்ளதால், அதுவரை தற்காலிகமாக நீதிமன்றம் செயல்பட அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் போலீஸ் இணைஆணையர் அலுவலகம் அருகில் உள்ள கட்டிடம் சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த பணிகளும் விரைவில் முடிக்கப்படாமல் கடந்த 6 மாதமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக வக்கீல்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த பணியை விரைவாக முடித்தால்தான் புதிய நீதிமன்ற கட்டிட பணிகளை தொடங்க ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர்.

எனவே அனைத்து வசதிகளுடன் புதிய நீதிமன்றம் விரைவாக கட்டி முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வக்கீல்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story