போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து ரூ.40 லட்சம் மோசடி, 2 பேர் கைது


போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து ரூ.40 லட்சம் மோசடி, 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 July 2017 10:30 PM GMT (Updated: 28 July 2017 7:23 PM GMT)

ஏ.டி.எம். கார்டுகளின் விவரத்தை தெரிந்து கொண்டு போலி கார்டுகள் தயாரித்து ரூ.40 லட்சம் மோசடி செய்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை உப்பார தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம், தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.59 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று விசாரித்தார்.

அப்போது, ஆன்லைன் மூலம் வேறு ஒரு வங்கி கணக்குக்கு பணம் மாற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மகாலிங்கம் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் மர்ம நபர்கள், மகாலிங்கத்தின் ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு, அதன் மூலம் பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மகாலிங்கத்திடம் போலீசார், யாரிடமாவது ஏ.டி.எம். கார்டை கொடுத்தீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர் நான் யாரிடமும் ஏ.டி.எம். கார்டை கொடுப்பது இல்லை. ஆனால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில்தான் தனது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போடுவதாகவும், அதற்காக மட்டுமே ஏ.டி.எம். கார்டை அங்குள்ள ஊழியர்களிடம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெட்ரோல் பங்க்குக்கு மாறுவேடத்தில் சென்று கண்காணித்த னர். அப்போது அங்கு இருக்கும் ஊழியர்கள் 2 பேர் வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி சுவைப் கருவியில் தேய்த்துவிட்டு, அதுபோன்று மற்றொரு கருவியில் தேய்ப்பதையும் பார்த்தனர்.

அதன்பின்னர் போலீசார் ஒருவாரம் அந்த பெட்ரோல் பங்க்குக்கு சென்று கண்காணித்தபோதும், அந்த ஊழியர்கள் அதுபோன்று செய்து வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள், கோவையை சேர்ந்த ஆனந்த் (வயது 32), மகேந்திரன் (30) என்பதும், ‘ஸ்கிம்மர்‘ என்ற கருவி மூலம் ஏ.டி.எம். கார்டை தேய்த்து, அதில் உள்ள எண்ணை தெரிந்து கொண்டு, அதன் மூலம் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்கள் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் போட ஏ.டி.எம். கார்டுகளைதான் பயன்படுத்துகிறார்கள். அதிலும் சிலர், தங்கள் வாகனத்தை விட்டு கீழே இறங்காமல், ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணையும் ஊழியர்களிடம் கூறி விடுவார்கள். அவ்வாறு செய்ததன் மூலம்தான் இந்த மோசடி நடந்துள்ளது.

ஏ.டி.எம். கார்டை கொடுத்து, ரகசிய எண்ணையும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும்போது, அந்த கார்டை சுவைப் கருவியில் தேய்த்துவிட்டு, ஏ.டி.எம். கார்டு எண்ணை ஸ்கேன் செய்யும் ஸ்கிம்மர் என்ற கருவியில் தேய்த்து விடுகிறார்கள். அப்போது அந்த எண் உள்பட ஏ.டி.எம். கார்டில் இருக்கும் அனைத்து விவரங்களும் கருவியில் பதிவாகி விடுகிறது.

உடனே அவர்கள் அதை வைத்துக்கொண்டு போலி கார்டுகள் தயாரிக்கும் கும்பலை அணுகி, போலி கார்டுகள் தயாரித்து உள்ளனர். பின்பு, அந்த கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுத்து உள்ளனர். அதுபோன்று அந்த கார்டுகள் மூலம் ஆன்லைனிலும் பொருட்கள் வாங்கி உள்ளனர். அவர்கள் இதுவரை ரூ.40 லட்சம் மோசடி செய்தது தெரியவந்து உள்ளது.

மேலும் தலைமறைவாக இருக்கும் 2 பேர் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து கொடுக்கும் கும்பலை சேர்ந்தவர்கள். அவர்களை பிடித்தால் மேலும் பல தகவல்கள் வெளியாகும். எனவே அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் பிடித்துவிடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story