வாணியம்பாடியில் பஞ்சுமெத்தை குடோனில் பாய்லர் வெடித்து தீவிபத்து


வாணியம்பாடியில் பஞ்சுமெத்தை குடோனில் பாய்லர் வெடித்து தீவிபத்து
x
தினத்தந்தி 17 July 2017 9:15 PM GMT (Updated: 17 July 2017 6:45 PM GMT)

வாணியம்பாடியில் நேற்றுகாலை பஞ்சுமெத்தை குடோனில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் பலலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

வாணியம்பாடி,

வாணியம்பாடியை சேர்ந்தவர் நியாமத் (வயது30). இவர் பஞ்சுமெத்தை, சோபா மற்றும் தலையணை ஆகியவற்றை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார். வாணியம்பாடி புதூரில் இதற்கான குடோன் மற்றும் கடை உள்ளது. இங்கு 10–க்கும் மேற்பட்டவர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.

பஞ்சுமெத்தை மற்றும் சோபாக்களுக்கு பாலிஷ் போடுவதற்கும், சரியானமுறையில் பேக்கிங் செய்வதற்கும் பாய்லரை பயன்படுத்தி வருகிறார். இதற்காக நியாமத் நேற்றுமுன்தினம் வேலூரில் இருந்து இரண்டு புதிய பாய்லர்களை வாங்கிவந்து குடோனில் பொருத்திஉள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அவர் வழக்கம்போல கடையை திறக்கவந்தார்.

கடையை திறந்த அவர் குடோனில் பொருத்தப்பட்ட பாய்லரை இயக்கிவிட்டு வெளியே வந்து நின்றுகொண்டிருந்தார். சிறிது நேரத்தில் குடோனில் இருந்து டமார் என்று பயங்கர சத்தம் கேட்டது. மேலும் அங்கிருந்து புகைவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குடோனில் பார்த்தபோது பாய்லர் வெடித்திருந்தது. இதனால் குடோனில் இருந்த பொருட்கள் தீபிடித்து எரிந்தது.

உடனடியாக இதுபற்றி வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் பலலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. பாய்லர் வெடித்தபோது குடோனில் யாரும் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story