பெற்றோரை அடையாளம் காட்டிய ஆதார் குடும்பத்தினருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்


பெற்றோரை அடையாளம் காட்டிய ஆதார் குடும்பத்தினருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 12 July 2017 12:00 AM GMT (Updated: 11 July 2017 9:00 PM GMT)

பெங்களூரு மனநல காப்பகத்தில் ஆதரவற்ற நிலையில் தங்கி இருந்த 3 பேரின் பெற்றோரை ஆதார் கார்டு அடையாளம் காட்டியது. இவர்கள் 3 பேரும் தங்களின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நேற்று நடந்தது.

பெங்களூரு,

பெங்களூரு ஓசூர் ரோட்டில் மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் இயங்கும் மனநல காப்பகம் உள்ளது. இங்கு, 85 பேர் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். மன வளர்ச்சி குன்றி ஆதரவற்ற நிலையில் மோனு(வயது 18), ஓம்பிரகாஷ்(21) மற்றும் நீலகண்டா(19) ஆகியோரும் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தனர்.

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் சுற்றிய இவர்கள் 3 பேரையும் தனியார் தொண்டு நிறுவனம் மீட்டு அரசு மனநல காப்பகத்தில் சேர்த்தது. நீலகண்டா, கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24–ந் தேதியில் இருந்தும், மோனு மற்றும் ஓம்பிரகாஷ் ஆகியோர் 2016–ம் ஆண்டு ஜூன் மாதம் 21–ந் தேதியில் இருந்தும் மனநல காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆதார் கார்டு பெற நடவடிக்கை

இவர்களிடம் காப்பக ஊழியர்கள் விசாரித்தபோது ஓம்பிரகாஷ் தனது பெயரை தெரிவித்தார். மற்றபடி எந்த விவரங்களையும் அவரால் கூற முடியவில்லை. மற்ற 2 பேராலும் தங்களை பற்றிய எந்த விவரங்களையும் கூற முடியவில்லை. இதனால், அவர்களின் உண்மையான பெயர், சொந்த ஊர் எது? என்பதை கண்டுப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், அவர்கள் 2 பேருக்கும் மோனு, நீலகண்டா என பெயர் வைத்து மனநல காப்பக ஊழியர்கள், அதிகாரிகள் அழைக்க தொடங்கினர்.

இந்த நிலையில் மோனு, ஓம்பிரகாஷ், நீலகண்டா உள்பட காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கையில் காப்பக நிர்வாகம் ஈடுபட்டது. இதற்காக ஆதார் கார்டு வினியோகிக்கும் பெங்களூரு மண்டல அலுவலகத்தை அவர்கள் தொடர்பு கொண்டனர்.

‘பயோமெட்ரிக்‘ விவரங்கள்

இதன் தொடர்ச்சியாக ஆதார் கார்டுக்காக மோனு, ஓம்பிரகாஷ், நீலகண்டா உள்பட அனைவருக்கும் ‘பயோமெட்ரிக்‘ விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது, அவர்கள் 3 பேர் உள்பட இன்னும் சிலபேரை தவிர்த்து பிறருக்கு ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டன.

மோனு, ஓம்பிரகாஷ், நீலகண்டா உள்பட மேலும் சிலருக்கு ஆதார் கார்டு கிடைக்காதது பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு ஏற்கனவே ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களின் ஆதார் கார்டு விவரங்களை ஆதார் கார்டு அதிகாரிகள், காப்பக ஊழியர்கள் சேகரித்தனர்.

உண்மையான பெயர்கள்

அதன்மூலம், மோனு என பெயரிடப்பட்டவரின் உண்மையான பெயர் நரேந்திரா என்பதும், அவர் ரமேஷ்–சரஸ்வதி தம்பதியின் மகன் என்பதும், சொந்தஊர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் என்பதும் தெரியவந்தது. இதேபோல், நீலகண்டா என அழைக்கப்பட்டவரின் உண்மையான பெயர் பாலாஜி நாயக் என்பதும், அவர் துரைசாமி நாயக்–மல்லிகாம்மா தம்பதியின் மகன் என்பதும், அவருடைய சொந்த ஊர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வீரனாமலா என்பதும் தெரியவந்தது.

மேலும், ஓம்பிரகாஷ் என்பவரின் உண்மையான பெயர் ஓம்பிரகாஷ் பிரஜாபதி என்பதும், அவர் ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஓம்பிரகாஷ் பிரஜாபதியின் தந்தை பெயர் ஜெகதீஷ் பிரஜாபதி என்பதும், கடந்த 2016–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23–ந் தேதி வீட்டில் இருந்து மாயமானதும் தெரியவந்தது.

குடும்பத்தினருடன் சேர்ப்பு

இதையடுத்து, ஆதார் கார்டு அதிகாரிகள், காப்பக நிர்வாகம் மற்றும் போலீசாரின் உதவியுடன் மோனு, ஓம்பிரகாஷ், நீலகண்டா ஆகியோரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று காப்பகத்துக்கு நீலகண்டாவின் தாய் மல்லிகாம்மாவும், மோனு மற்றும் ஓம்பிரகாஷ் ஆகியோரின் தந்தைகளும் வந்தனர். இவர்கள் தங்களின் மகன்களை பார்த்து பூரிப்பு அடைந்தனர். மேலும், கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தனர்.

பின்னர் மோனு, ஓம்பிரகாஷ், நீலகண்டா ஆகியோரை அவர்களின் குடும்பத்துடன் பெங்களூரு நகர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திவ்யா நாராயணப்பா, மனநல காப்பகத்தின் சூப்பிரண்டு நாகரத்னம்மா ஆகியோர் ஒப்படைத்தனர். வீட்டில் இருந்து பிரிந்து சென்ற மகன்களை மீட்டு பத்திரமாக தங்களிடம் ஒப்படைத்ததற்கு அவர்கள் 3 பேரின் குடும்பத்தினரும் ஆதார் கார்டு அதிகாரிகள், காப்பக அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆதார் கார்டு விவரங்களால் சாத்தியம்

இதுபற்றி பெங்களூரு நகர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திவ்யா நாராயணப்பா கூறுகையில், ‘மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் இந்த காப்பகம் இயங்கி வருகிறது. மனவளர்ச்சி குன்றி இங்கு பராமரிக்கப்பட்டு வந்த 3 பேரை அவர்களின் குடும்பத்தினருடன் ஒப்படைத்துள்ளோம். ஆதார் கார்டு விவரங்கள் மூலம் இது சாத்தியமாகி உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இந்த காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவர்களில் 15 பேரை அவர்களுடைய குடும்பத்துடன் சேர்த்துள்ளோம். இதில், இவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 6 பேர் ஆதார் கார்டு விவரங்கள் அடிப்படையில் அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளனர்‘ என்றார்.

இதுதொடர்பாக, காப்பகத்தின் சூப்பிரண்டு நாகரத்னம்மா கூறுகையில், ‘மனநலம் பாதிப்பு மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள் என 85 பேர் காப்பகத்தில் உள்ளனர். ஆதார் கார்டு விவரங்கள் மூலம் மோனு, ஓம்பிரகாஷ், நீலகண்டா ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது மகிழ்ச்சியான வி‌ஷயம். மனநல காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களுக்கு நிமான்ஸ் மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. திறமை வளர்ப்பு மையத்தின் மூலம் வெவ்வேறு வகையான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது‘ என்றார்.

மகிழ்ச்சி அளிக்கிறது

இதுகுறித்து, ஆதார் கார்டு வினியோகிக்கும் பெங்களூரு மண்டல துணை இயக்குனர் அசோக் லெனின் கூறுகையில், ‘வீட்டை விட்டு பிரிந்து காப்பகத்தில் இருந்த 3 பேரை ஆதார் கார்டு விவரங்கள் உதவியுடன் அவர்களின் குடும்பத்துடன் சேர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது‘ என்றார்.


Next Story