சாலையை சீரமைக்க கோரி 2–வது நாளாக கிராம மக்கள் தர்ணா போராட்டம்


சாலையை சீரமைக்க கோரி 2–வது நாளாக கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2017 10:15 PM GMT (Updated: 15 Jun 2017 8:14 PM GMT)

கொலக்கம்பை அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் 2–வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலக்கம்பை,

கொலக்கம்பை அருகே உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட ட்ரூக், செங்கல்புதூர், பக்காசூரன் மலை, டேன் டீ ஆகிய கிராமங்களில் குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 500–க்கு மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.

மேலும் இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் பள்ளி, மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் எல்லா தேவைகளுக்கும் நான்சச், குன்னூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தான் சென்று வர வேண்டும். இந்த நிலையில் கடந்த 40 ஆண்டு காலமாக நான்சச் பிரிவில் இருந்து பக்காசூரன் மலை கிராமம் வரை இடையேயுள்ள 4 கி.மீ சாலையை சீரமைக்க கோரி நேற்று முன்தினம் அந்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2–வது நாளாக போராட்டம்

இதனை தொடர்ந்து நேற்று 2–வது நாளாக அந்த பகுதி கிராம மக்கள், வேலைக்கு செல்லாமல் ட்ரூக் பகுதியில் உள்ள பச்சைத்தேயிலை எடைபோடும் பகுதியில் திரண்டனர். பின்னர் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று அந்த பகுதி கிராமக்கள், வேலைக்கு செல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, பத்ரி ( நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர்) ஆல்தொரை (சி.ஐ.டி.யு), சுதாகர் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்ததும் நீலகிரி மாவட்ட வன அலுவலர் கலாநிதி, குன்னூர் தாசில்தார் சிவக்குமார், டேண்டீ பொது மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்குள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் அதற்கு ஒத்துக்கொள்ளாத பொதுமக்கள், சம்பவ இடத்துக்கு கலெக்டர், ஆர்.டி.ஓ வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சாலை சீரமைக்கும்வரை போராட்டத்தை தொடருவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story