கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து அறிய தடயவியல் சோதனை


கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து அறிய தடயவியல் சோதனை
x
தினத்தந்தி 29 May 2017 11:15 PM GMT (Updated: 29 May 2017 8:56 PM GMT)

கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் சென்னை ஆடிட்டர் குடும்பத்துடன் பலியான சம்பவத்தில்,

மாமல்லபுரம்,

கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து அறிய காரின் பேட்டரியை தடயவியல் சோதனைக்கு அனுப்பிய போலீசார், 3 பேரின் செல்போன் உரையாடல்களை ஆராயவும் முடிவு செய்து உள்ளனர்.

சென்னை ஆடிட்டர் குடும்பத்துடன் பலி

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மணமையில் தனியார் வீட்டுமனை வளாக மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஆடிட்டர் ஜெயதேவன் (வயது 55), அவருடைய மனைவி ரமாதேவி (55), அவர்களுடைய மகள் திவ்யஸ்ரீ (26) ஆகிய 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய என்ன காரணம்?. ஏ.சி. எந்திரம் வெடித்து தீப்பிடித்ததா?. மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜெயதேவன், காரை தனியார் வீட்டுமனை வளாகத்தில் நிறுத்த காரணம் என்ன?. அங்கு அவர் வீட்டுமனை ஏதாவது வாங்கி உள்ளாரா?. மனை வாங்கிய விவகாரத்தில் தரகர்கள் யாராவது அவரை குடும்பத்துடன் காருக்குள் வைத்து பூட்டி திட்டமிட்டு எரித்து கொன்றனரா? என பல்வேறு கோணங்களில் மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செல்போன் உரையாடல்

இதற்கிடையில் காரில் எரிந்த நிலையில் கிடந்த 3 பேரின் செல்போனையும் போலீசார் கைப்பற்றி அதனை பரிசோதித்தனர். சிம் கார்டு, பேட்டரி உள்ளிட்டவைகள் எரிந்து விட்டதால் 3 போன்களும் செயல் இழந்துவிட்டன. அதனால் போலீசார், சைபர் கிரைம் உதவியுடன் கடைசியாக, இறந்த 3 பேரிடம் யார்? யார்? பேசினார்கள் என்ற செல்போன் உரையாடலை பதிவு செய்து ஆராய முடிவு செய்து உள்ளனர்.

அதேபோல் கணவன், மனைவி, மகள் என 3 பேரும் தனியாக வந்து உள்ள நிலையில் மருமகனான ராணுவ கேப்டன் சரத் ஏன் அவர்களுடன் வரவில்லை?. பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் இருந்து மனைவியை மட்டும் ஏன்? அவர் தனியாக சென்னைக்கு அனுப்பினார் எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.

தடயவியல் சோதனை

சரத், கார் தீப்பிடித்து எரிந்த தினத்தன்று (சனிக்கிழமை) யார்? யாரிடம் செல்போனில் பேசினார் எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மருமகன் சரத்திடம் தனியாக விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

மேலும் கார் பேட்டரியில் அதிக வெப்பம் ஏற்பட்டு, வயருடன் பேட்டரி எரிந்து அதன் மூலம் கார் உள்ளே குளிர்சாதன கியாஸ் கசிந்து அதன்பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்க நிலையில் 3 பேரும் எரிந்து இறந்தார்களா? எனவும் போலீசார் ஒரு புறம் சந்தேகிக்கின்றனர்.

அதனால் எரிந்த கார் பேட்டரி, குளிர்சாதன எந்திரம் ஆகியவற்றை கைப்பற்றி சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர். தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் மர்ம மரணம் குறித்து போலீசார் பல கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story