நீர்வளம், மண்வளத்தை பாதுகாக்க சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும்


நீர்வளம், மண்வளத்தை பாதுகாக்க சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும்
x
தினத்தந்தி 10 March 2017 10:30 PM GMT (Updated: 10 March 2017 8:25 PM GMT)

நாட்டின் நீர்வளம், மண்வளத்தை பாதுகாக்க சீமை கருவேல மரங்கள் அழிக்கப்படவேண்டும் என்று முதன்மை செசன்சு நீதிபதி தெரிவித்து உள்ளார்.

திருச்சி,

முதன்மை செசன்சு நீதிபதி

இது தொடர்பாக திருச்சி முதன்மை செசன்சு நீதிபதி குமரகுரு வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சீமைகருவேல மரங்கள் மண்ணின் சத்துக்களை முழுமையாக உறிஞ்சி விடுகின்றன. அவற்றின் வேர்கள் 100 மீட்டர் ஆழமும் அத்துடன் பக்கவாட்டில் அதாவது நீளவாக்கில் 30 மீட்டர் அளவிற்கும் சென்று நிலத்தில் உள்ள நீர் முழுவதையும் உறிஞ்சி விடுகின்றன. இலைகள் அதிகமான கார்பன்டை ஆக்சைடை வெளியிடுவதால் இந்த மரங்கள் நம் அருகில் இருந்தால் காற்றில் உள்ள ஆக்சிஜன் குறைந்து நாம் மூச்சுவிடுவதற்கு சிரமப்படும் நிலை ஏற்படுகிறது.

சீமை கருவேல மரங்கள்

இந்த மரங்கள் ஆக்கிரமித்த எத்தியோப்பியாவில் அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரமாக இருந்த மேய்ச்சல் நிலங்களும் புல்வெளிகளும் முற்றிலும் அழிந்து அந்நாடு உணவு பஞ்சத்தில் தவித்து கொண்டுள்ளது. இந்த மரங்கள் அருகில் தொடர்ந்து வசித்தால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் மலட்டு தன்மை ஏற்படும் ஆபத்தும் உள்ளது. கால்நடைகள் இவற்றின் காய்களை சாப்பிடும்போது இவற்றின் விதைகள் கால்நடைகளின் சாணத்தின் மூலம் பரவி புல்வெளிகள் நிறைந்த பகுதிகளும் நீர் நிலைகளும் சீமை கருவேல காடுகளாக மாறியுள்ளன. இந்த மரத்தின் இலைகளில் நச்சுத்தன்மை கொண்ட வேதி பொருள்கள் மற்றும் அமிலங்கள் சுரப்பதால் இவை ஆடு மாடுகளுக்கும் ஒவ்வாத தீவனம் ஆகும். இந்த தீவனத்தை உண்ணும் ஆடு, மாடுகளின் இறைச்சி மற்றும் பாலை அருந்துவதால் மனிதர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உயிரணுக்களின் எண்ணிக்கையும் குறைகிறது.

அழிக்க வேண்டும்

சீமைக்கருவேல மரங்களை வளரவிடும் பொழுது நிலத்தடி நீரும் முற்றிலும் சீமைகருவேல மரங்களால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் வற்றி தண்ணீர் பஞ்சம் பெருமளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டுமின்றி சீமை கருவேல மரங்களின் இலைகள் மழைகாலம் மற்றும் பனிகாலங்களிலும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடுவதால் மழை பெய்யாமல் பொய்த்து விட வாய்ப்பு உள்ளது. மேலும் மீதமுள்ள நிலத்தடி நீரையும், காற்றையும் நச்சு தன்மையுடையதாக மாற்றிவிடுகிறது. மேலும் சீமைகருவேல மரங்களை வளரவிட்டால் அதனை அழிப்பது மிகவும் கடினம்.

எனவே தனியார் நிலங்களில் உள்ள சீமைகருவேல மரங்களை நிலத்தின் உரிமையாளர்களும், அரசு நிலத்தில் உள்ள சீமைகருவேல மரங்களை அந்தந்த துறைகளும் முற்றிலும் அழித்து நாட்டின் நீர்வளத்தையும், மண்வளத்தையும் வேளாண்மையையும், அனைத்து உயிரினங்களையும் மனிதவளத்தையும் காக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story