சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 மாத பச்சிளம் குழந்தை மீட்பு


சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 மாத பச்சிளம் குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 5 March 2017 10:45 PM GMT (Updated: 5 March 2017 10:25 PM GMT)

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. குழந்தையை விட்டு சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 10-வது பிளாட்பாரத்தில் இருந்து குழந்தை அழுகுரல் கேட்டது. உடனே போலீசார் அங்குசென்று பார்த்துள்ளனர்.

பிளாட்பாரத்தில் குடிநீர் விற்பனை நிலையத்தின் அருகே உள்ள ஒரு இருக்கையில் துணியால் மூடப்பட்டு குழந்தை இருந்தது.

உயிருடன் மீட்பு

பிறந்து 2 மாதங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு அளித்த பின்னர் குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகளிடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை யாரேனும் தவற விட்டு சென்றனரா? இல்லையெனில் விட்டு சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

இந்த குழந்தையை யாரோ விட்டு தான் சென்றுள்ளார்கள். இதைபோல் ரெயில் நிலையம் மற்றும் ரெயில்களில் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது இது முதல் தடவை அல்ல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஆந்திராவில் இருந்து வந்த ரெயிலில் பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. நாங்கள் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தோம்.

விட்டு சென்றது யார்?

ஆனால், அந்த குழந்தை நாங்கள் மீட்கும் முன்பு வெகுநேரம் அழுததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது. இதேபோல் குழந்தையை பொதுஇடங்களில் போட்டு செல்வது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.

இந்த குழந்தையை பிளாட்பாரத்தில் விட்டு சென்றது யார்? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் விட்டு சென்ற நபரை பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story