டி20 உலகக்கோப்பை: 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி


டி20 உலகக்கோப்பை: 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி
x
தினத்தந்தி 7 Nov 2021 5:34 PM GMT (Updated: 7 Nov 2021 5:34 PM GMT)

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

சார்ஜா,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்12 சுற்றில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முகம்மது ரிஸ்வானும், பாபர் அசாமும் களமிறங்கினர். ரிஸ்வான் 15 ரன்களில் வெளியேற, பாபர் வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 66 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இறுதியில் ஹபீஸ் மற்றும் மாலிக் அதிரடி காட்ட, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. மாலிக் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் 54 ரன்களை விளாசினார். ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணியின் சார்பில் ஜார்ஜ் முன்சே மற்றும் கைல் கோட்சர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் கைல் கோட்சர் 9 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேத்யு கிராஸ் 5 ரன்களும், ஜார்ஜ் முன்சே 17 ரன்களும், டைலன் பட்ஜ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், மைக்கேல் லீஸ்க் 14 ரன்களிலும், கிரிஸ் கிரேவ்ஸ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனிடையே மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அரைசதத்தை பதிவு செய்திருந்த ரிச்சி பெர்னிங்டன் 54 (37) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இறுதியில் 20 ஒவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷதப் கான் 2 விக்கெட்டுகளும், ஹரிஸ் ராவ்ப், ஷாகீன் அப்ரிதி மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. 


Next Story