மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்த டு யூ யூ


மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்த டு யூ யூ
x
தினத்தந்தி 18 April 2022 6:24 AM GMT (Updated: 18 April 2022 6:24 AM GMT)

டு யூ யூவின் தலைமையில் ஆராய்ச்சி குழுவினர், சீன மருத்துவ பாரம்பரிய நூல்களை ஆராய்ந்து ‘ஸ்வீட் வாம்வுட்’ எனும் தாவரத்தில் மலேரியா ஒட்டுண்ணியை எதிர்த்துப் போராடும் காரணி இருப்பதை கண்டறிந்தனர்.

ல நூற்றாண்டுகளாக மக்களை துன்புறுத்தி வந்த மலேரியா நோய்க்கு ‘ஆர்ட்டெமிசினின்’ எனும் மருந்தைக் கண்டுபிடித்தார், சீனாவைச் சேர்ந்த டு யூ யூ. சீனாவின் பாரம்பரிய மருத்துவ நூல்களைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, இந்த மருந்தை கண்டறிந்தார். இதற்காக 2015-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார் டு யூ யூ. இதன் மூலம் சீனாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

சீனாவிலுள்ள நிங்போ என்ற நகரில் 1930-ம் ஆண்டு  நடுத்தர குடும்பத்தில் டு யூ யூ பிறந்தார். அவரது பெற்றோர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். நன்றாக படிக்கும் மாணவியான டு யூ யூ காச நோயால் பாதிக்கப்பட்டதால், இரண்டு வருடகாலம் வீட்டிலேயே இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இருந்தாலும் தன்னுடைய தன்னம்பிக்கையை பயன்படுத்தி, கல்லூரியில் மருத்துவ துறையை தேர்ந்தெடுத்து, தன்னை தாக்கிய நோய் போன்ற பல நோய்களுக்கு தீர்வு காண விரும்பினார்.

பெய்ஜிங் மருத்துவக் கல்லூரியில் 24 வயதில் பட்டம் பெற்றார் டு யூ யூ. தாவரங்களை வகைப்படுத்துவது, அதில் உள்ள பொருட்களை பிரித்தெடுப்பது மற்றும் அவற்றின் வேதியியல் கட்டமைப்புகளை எவ்வாறு தீர்மானிப்பது என்பதைக் கற்றுக்கொண்டார். வேலை பார்த்துக் கொண்டே சீன மருத்துவத்தையும் கற்றுக்கொண்டார். வியட்நாம் வீரர்களிடையே பெரும் உயிரிழப்பை, ஏற்படுத்திய மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கு,  அந்த நாடு சீனாவிடம் உதவி கேட்டது. 

அதற்காக தீட்டப்பட்ட திட்டத்திற்கு டு யூ யூ தலைமை தாங்கினார். இதற்காக டு யூ யூ, தனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடைய பெற்றோரிடம் ஒப்படைத்து, ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு மலேரியா பாதிப்பு அதிகம் இருந்த தெற்கு சீனாவில் உள்ள ஹைனன் தீவுக்குச் சென்றார்.

டு யூ யூவின் தலைமையில் ஆராய்ச்சி குழுவினர், சீன மருத்துவ பாரம்பரிய நூல்களை ஆராய்ந்து ‘ஸ்வீட்  வாம்வுட்’ எனும் தாவரத்தில் மலேரியா ஒட்டுண்ணியை எதிர்த்துப் போராடும் காரணி இருப்பதை கண்டறிந்தனர்.  குறைந்த வெப்பநிலையில் அந்த தாவரத்தை கொதிக்கவைத்து தயாரித்த கலவையான ‘ஆர்ட்டெமிசினினை’ எலிகள் மற்றும் குரங்குகள் மீது பரிசோதித்து பார்த்தார் டு யூ யூ. அந்த சோதனை நூறு சதவீதம் வெற்றி அடைந்தது.

இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன் டு யூ யூ மற்றும் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் மீது பரிசோதித்து பார்த்தார்கள். எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பின்பு நோயாளிகளிடம் பரிசோதித்துப் பார்த்தனர். அவர்கள் அனைவருமே குணமடைந்தனர்.

டு யூ யூ, 1979-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பில் ஆர்ட்டெமிசினின் பற்றி உரையாற்றினார். ஆனாலும் 20 வருடங்கள் கழித்தே உலக சுகாதார அமைப்பு மலேரியாவை எதிர்த்துப் போராடும் மருந்துகளில் முதலாக ஆர்ட்டெமிசினின் பயன்படுத்த பரிந்துரைத்தது. ஆர்ட்டெமிசினின் கண்டுபிடிப்பை ‘‘கடந்த அரை நூற்றாண்டில் மிக முக்கியமான மருத்துவ கண்டுபிடிப்பு’’ என்று பாராட்டியது. 

Next Story