‘பெண்கள் தினம்’ உருவாக்கிய கிளாரா ஜெட்கின்


‘பெண்கள் தினம்’ உருவாக்கிய கிளாரா ஜெட்கின்
x
தினத்தந்தி 7 March 2022 5:30 AM GMT (Updated: 5 March 2022 11:00 AM GMT)

பெண்கள் தினம் உருவாகக் காரணமாக இருந்த கிளாரா ஜெட்கின். அவரைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.

ண்-பெண் பாகுபாடு இல்லாமல், அனைத்து துறைகளிலும் பெண்கள் வெற்றிகரமாக தடம் பதித்து வருகிறார்கள். ஆனால், இதற்கு முன்பு பெண்கள், திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்பு கிடைக்காமலும், ஆண்களுக்கு இணையான ஊதியம் கிடைக்காமலும், சம உரிமையை இழந்த காலமும் இருந்தது. அவற்றையெல்லாம் தகர்த்தெறிய பல பெண்கள் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர், பெண்கள் தினம் உருவாகக் காரணமாக இருந்த கிளாரா ஜெட்கின். அவரைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.

கிளாரா ஜெட்கின் ஜெர்மனியைச் சேர்ந்தவர். அவர் பிறந்த 1857-ம் ஆண்டு நியூயார்க்கின் பல இடங்களில் பெண்களின் உரிமைகளுக்காக போராட் டங்கள் நடந்தன. அது  மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அதைப் பார்த்து வளர்ந்த கிளாராவுக்கு சிறு வயதிலேயே போராடும் குணம் உருவானது. சிறு வயதிலேயே பல போராட்டங்களில் பங்கேற்றார். மேலும், பெண்களின் உரிமையை நிலைநாட்டும் நோக்கில் படித்து வழக்கறிஞரானார்.  

ஜெர்மனியின் சோஷியலிச கட்சியில் இணைந்து மகளிரணியின் தலைவராக உயர்ந்தார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத அந்தக் காலத்திலே பாரிஸ் நகரில் 15 ஆயிரம் பெண்களைத் திரட்டி, பெண்களுக்கு சம உரிமை வழங்க கோரியும், ஊதிய உயர்வுக்காகவும், ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்பதை வலியுறுத்தியும் பேரணி நடத்தினார். இதனால் அவர் புகழ் உலகெங்கும் பரவத் தொடங்கியது. 

பெண்கள் தினம் உருவானது எப்படி?
உலகம் முழுவதும் பெண்களின் போராட்டம் தீவிரமாக நடந்தபோது 1910-ம் ஆண்டு கோபன்ஹேகனில் ‘சர்வதேச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. 17 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் கிளாராவும் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பெண்கள் தினம் கொண்டாடும் யோசனையையும், அதன் முக்கியத்துவத்தையும் முன்வைத்தார்.  இதனை அனைவரும் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து 1911-ம் ஆண்டு மார்ச் 19-ல் கிளாராவால் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1913-ம் ஆண்டு மன்னர்  லூயிஸ் பிளாங்க், பெண்களுக்கு வாக்குரிமையை அளிக்க ஒப்புக்கொண்ட நாளை நினைவு கூரும் வகையில் மகளிர் தினம்  மார்ச் 19-ல் இருந்து மார்ச் 8-க்கு மாற்றப்பட்டாலும் உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக பெண்கள் தினம் அறிவிக்கப்படாமலே இருந்தது. 

1917-ம் ஆண்டு, சான் பிரான்சிஸ்கோவில், அலெக்ஸாண்ட்ரா தலைமையில் நடந்த போராட்டத்தின் விளைவாக 1921-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெண்கள் தினம் கொண்டாடும் அதே நேரத்தில், அதற்காக பாடுபட்ட பெண்களையும் நினைவுகூர்ந்து, அவர்கள் விரும்பியவண்ணம் அனைத்துத் துறைகளிலும் காலூன்றி மென்மேலும் வளர்ச்சியடைவதை உறுதி செய்வோம். 

Next Story