ஜெயம் ரவியின் 'பிரதர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படமானது அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த 'மாறன்', ஜி.வி பிரகாஷ் நடித்த 'செம' மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் 'மக்காமிஷி' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், தீபாவளிக்கு (அக்டோபர் 31) வெளியாகும் என நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தீபாவளியன்று ரஜினியின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி மற்றும் சிவகார்த்திகேயனின் அமரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜெயம் ரவியின் பிரதர் படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story