மும்பைவாசிகளை வாக்களிக்க வலியுறுத்தும் பாலிவுட் நட்சத்திரங்கள்


மும்பைவாசிகளை வாக்களிக்க வலியுறுத்தும்  பாலிவுட் நட்சத்திரங்கள்
x
தினத்தந்தி 18 May 2024 1:31 PM GMT (Updated: 18 May 2024 1:51 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதை உறுதிசெய்யுமாறு பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பை வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மும்பை,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் (20ம் தேதி) 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

மராட்டியத்திலுள்ள 13 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்குமாறு பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பை வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஷாருக்கான் தனது எக்ஸ் தளத்தில் "பொறுப்பான இந்தியக் குடிமக்களாக, மகாராஷ்டிராவில் உள்ள மும்பைவாசிகள் நமது வாக்களிக்கும் உரிமையைப் வரும் திங்கட்கிழமை பயன்படுத்த வேண்டும். இந்தியராக நமது கடமையை செய்வோம், வாக்களிப்பது நமது உரிமை" என கூறியுள்ளார்.

சல்மான் கான் தனது எக்ஸ் தளத்தில் " நான் வருடத்தில் 365 நாட்களும் உடற்பயிற்சி செய்கிறேன், இப்போது மே 20-ம் தேதி எனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தப் போகிறேன். எனவே நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள். ஆனால் வாக்களியுங்கள், உங்கள் பாரத் மாதாவை தொந்தரவு செய்யாதீர்கள்" என கூறியுள்ளார்.

சித்தார்த் மல்ஹோத்ரா, கரண் ஜோஹர் மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிற பாலிவுட் பிரபலங்களும் நாடாளுமன்ற தேர்தலில் மும்பை வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story