அரசியல் களத்தில் நடிகைகள்


அரசியல் களத்தில் நடிகைகள்
x

பல நடிகைகள் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆண்கள் மட்டுமே களமாடி வந்த அரசியல் களத்தில் பல பெண் அரசியல்வாதிகள் ஈடுபட்டு வெற்றி வாகைச் சூடி உள்ளனர். அதில் நடிகைகளும் அடங்குவர். தமிழ்நாட்டை ஆட்சி செய்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் ஈடுபட நினைக்கும் நடிகைகளுக்கு முன்னோடியாக இருக்கிறார்.

ஜானகி அம்மாள் தமிழ்நாடு முதல்வராகவும், ஜெயாபச்சன், ஹேமமாலினி போன்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் பதவி வகித்துள்ளனர். தொடர்ந்து பல நடிகைகள் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தற்போது தீவிர அரசியலில் உள்ள சில நடிகைகள் விவரம்:-

ரோஜா:

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிப் பட நாயகியாக வலம் வந்த ரோஜா அரசியலுக்கு வந்து, தற்போது ஜெகன் மோகன் கட்சியில் ஆந்திரா அரசின் அமைச்சராக பதவி வகிக்கிறார்.

குஷ்பு:

ஆரம்பத்தில் திமுக பின்னர் காங்கிரஸ் கட்சிகளில் இணைந்து அரசியல் பணியாற்றிய குஷ்பு, தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இந்திய அரசின் தேசிய மகளிர் ஆணையத்திலும் பதவி வகிக்கிறார்.

நக்மா:

1990-களில் ரஜினி, கார்த்திக் என முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக வலம் வந்த நக்மா, மகாராஷ்டிரா மாநில காங்கிரசில் இணைந்து அரசியல் பணிகளை செய்து வருகிறார்.

ரம்யா:

சிம்பு நடித்த `குத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா, தென்னிந்திய மொழிகளில் பிஸியாக இருக்கும்போதே அரசியல் களம் கண்டார். காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

விஜயசாந்தி:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விஜயசாந்தி தற்போது ஆந்திர பாஜக வில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.

நவ்நீத் கவுர்:

கருணாஸ் நடித்த `அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தில் அறிமுகமான நவ்நீத் கவுர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவரின் கணவர் ரவி ராணா மகாராஷ்டிராவில் சட்ட மன்ற உறுப்பினராக இருக்கிறார்.

நமீதா:

`மச்சான்' என்று சொல்லியே ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த நமீதா பாஜகவில் தன்னை ஐக்கியப்படுத்தி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

காயத்ரி ரகுராம்:

காயத்ரி ரகுராம் சில படங்களில் நாயகியாக நடித்தார். பின்னர் பாஜக வில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி எந்த கட்சியிலும் சேராமல் மவுனம் காத்து வருகிறார்.

விந்தியா:

சொந்த மண் தெலுங்காக இருந்தாலும், தமிழ் படங்களில் நடித்து தமிழ்நாட்டிலேயே செட்டிலான விந்தியா, பல வருடங்களுக்கு முன்பே அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டு அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளராக வலம் வருகிறார்.

ராதிகா:

சினிமா, சின்னத்திரை என பிஸியாக இருக்கும் ராதிகா தன்னுடைய கணவர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

ஸ்ரீப்ரியா:

1980-களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த ஶ்ரீபிரியா தன்னுடைய கலையுலக நண்பர் கமல்ஹாசன் `மக்கள் நீதி மையம்' கட்சியை ஆரம்பித்ததும் அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கட்சியின் மேல் மட்ட தலைவர்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார்.

விநோதினி வைத்தியநாதன்:

`எங்கேயும் எப்போதும்', படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தார் வினோதினி வைத்தியநாதன். சமீபத்தில் வெளிவந்த `பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்தார். இப்போது மக்கள் நீதி மையத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

கவுதமி:

1990 களில் புகழ்பெற்று விளங்கிய கவுதமி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பல ஆண்டு காலமாக கட்சி பணியில் இருக்கும் இவருக்கு சில வருடங்களுக்கு முன் மத்திய அரசின் சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது.


Related Tags :
Next Story