டெல்லி ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு - ஜெயிலரில் மாற்றப்படும் அந்த காட்சி


டெல்லி ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு - ஜெயிலரில் மாற்றப்படும் அந்த காட்சி
x

ஜெயிலர் படத்தில் வந்த அந்த முக்கிய காட்சியை நீக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்கிற திகார் சிறை ஜெயிலராக நடித்துள்ளார்.

அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல ஹிட் தான். தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படம் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

ரூ. 525 கோடிக்கு மேல் படம் இதுவரை வசூலித்துள்ளது என கடந்த வாரம் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஜெயிலர் திரைப்படம் ரூ. 200 கோடி முதல் ரூ. 240 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக கூறப்பட்டது. ஜெயிலர் படம் வெளிவந்த 19 நாள் முடிவில் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 575 கோடி வரையும், தமிழகத்தில் ரூ. 180 கோடி வரையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஜெயிலர் படத்தின் ஒரு கட்சியில் ஒரு கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெர்சி அணிந்த நபர் ஒருவர் பெண்களை தகாத வகையில் பேசுவது போல காட்சி இருக்கிறது. இப்படி அனுமதி இல்லாமல் ஜெர்சியை பயன்படுத்தி, நெகடிவ் காட்சியின் மூலம் குறிப்பிட்ட கிரிக்கெட் அணிக்கு இருக்கும் மதிப்பு குறையும் வகையில் செய்திருக்கின்றனர் என அந்த நிறுவனம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயிலர் படத்தில் இருக்கும் அந்த காட்சியை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்ய ஒப்புக்கொள்வதாக கூறினார். அதற்கு மனு தாரர் தரப்பும் ஒப்புக்கொண்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்களில் ஜெயிலர் படத்தில் இந்த மாற்றம் இருக்கும். மேலும் டிவி, ஓடிடியில் வெளியாகும்போதும் அந்த காட்சி மாற்றப்பட்டு இருக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.


Next Story