‘ஓ போடு’ பாடலால் பிரபலமான ‘ஜெமினி’


‘ஓ  போடு’ பாடலால் பிரபலமான ‘ஜெமினி’
x
தினத்தந்தி 10 Nov 2017 9:30 PM GMT (Updated: 11 Nov 2017 6:05 AM GMT)

‘மின்சாரக் கனவு’ படத்திற்குப் பிறகு படமெடுக்க நினைத்தபோது யாரை வைத்து எடுப்பது என்று யோசித்தோம்.

‘மின்சாரக் கனவு’ படத்திற்குப் பிறகு படமெடுக்க நினைத்தபோது யாரை வைத்து எடுப்பது என்று யோசித்தோம். எங்கள் குடும்ப நண்பர் விநியோகஸ்தர் ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ், ‘சியான் விக்ரமை வைத்து எடுக்கலாமே’ என்றார்.

‘தில்’ படத்தின் வெற்றியில் விக்ரம் தில்லாக இருந்தார். விக்ரமுடன் பேசினேன். மகிழ்வோடு ஒப்புக்கொண்டார்.

அடுத்து யார் டைரக்டர் எனப் பேசினோம். எங்கள் ‘மக்கள் தொடர்பாளர்’ பெரு துளசி பழனிவேல், ‘சரணைப் போடலாம். வளர்ந்து வரும் இயக்குனர். மூன்று.. நான்கு படங்களை இயக்கியுள்ளார். ஏவி.எம்மிற்கு டைரக்ட் செய்ய பொருத்தமானவர்’ என்றார்.

சரணை அழைத்துப் பேசினேன். தன் விருப்பங்களைச் சொல்லி ஒப்புக் கொண்டார். கதை சொன்னார் பிடித்திருந்தது. அவரே திரைக்கதை – வசனம் எழுதினார். படத்திற்கு பல தலைப்புகளைச் சொன்னார். நான் ‘காதில் கேட்டதும் பிரைட்டாக, கேட்சிங்காக இருக்க வேண்டும்’ என்று சொன்னேன்.

யோசித்துவிட்டு ‘ஜெமினி’ என்ற டைட்டில் எப்படி இருக் கிறது என்று கேட்டார்.

‘நன்றாக இருக்கிறது’ என்று கூறினேன். விநியோகஸ்தர்கள் ‘ஏவி.எம்.மின் ஜெமினி’ என்பது ரொம்ப சிறப்பாக இருக்கிறது. இரண்டு பெரிய நிறுவனங்களின் பெயரை வைத்து இதுவரை படம் வந்ததில்லை என்றார்கள். படத்திற்கு ‘ஏவி.எம்.மின் ஜெமினி’ என்ற பெயர் வைக்கப்பட்டது. நான் ஜெமினி வாசனின் மகன் பாலசுப்பிரமணியத்திற்கு கடிதம் எழுதி அனுமதி கேட்டேன். அவர் வையுங்கள் என மகிழ்வுடன் வாழ்த்துக் கடிதம் எழுதினார்.

கதாநாயகி கிரண். இளம் பெண் அறிமுகம். மலையாளத்தில் குணச்சித்திர நடிகரான முரளியை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்தோம். போலீஸ் அதிகாரிகளுக்கே எடுத்துக்காட்டாக நடித்தார். விக்ரம் ஆலோசனைப்படி கலாபவன் மணியை வில்லனாகப் போட்டோம். கலாபவன் மணி செய்யும் மிமிக்கிரிகளை சரண் பார்த்துவிட்டு, அவைகளைப் படத்தின் காட்சிகளில் சேர்த்தார். அவை நல்ல வரவேற்பைப் பெற்றன. வினு சக்ரவர்த்தியின் நடிப்பும் நன்கு வெளிப்படுத்தப் பட்டது.

‘ஜெமினி’ என்று படத்திற்கு பெயர் வைத்ததால் படத்தில் ஜெமினி கணேசன் நடித்தால் நன்றாக இருக்குமென நினைத்து, அவரை சிறு பாத்திரத்தில் நடிக்க வைத்தோம். அவரும் நடித்தார். ‘ஜெமினி’ படம்தான் ஜெமினிகணேசன் நடித்த கடைசிப் படமென்று நினைக்கிறேன்.

ஒளிப்பதிவாளர் – வெங்கடேஷ், கலை– தோட்டாதரணி, எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், சண்டைக் காட்சி – சூப்பர் சுப்பராயன், இசை – பரத்வாஜ், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து என சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்தனர். வைரமுத்து ஏவி.எம். நிறுவனங்களின் படங்களுக்கு 140 பாடல்கள் எழுதியுள்ளார். எந்த நிறுவனத்திலும் எந்தக் கவிஞரும் இவ்வளவு பாடல்கள் எழுதியதில்லை. அவர் எங்களுக்கு கவிஞர் மட்டுமல்லை. எங்கள் நிறுவனத்தில் ஒருவர்.

பூஜை போட்டு பட வேலைகளைத் தொடங்கினோம். சரண் சரியாகத் திட்டமிட்டு, படத்தின் வெளியீடுவரை ஷெட்யூல் போட்டுவிட்டார், தேதி வாரியாக.

மியூசிக் கம்போசிங், பாட்டு எழுதுவது, பாட்டு ஒலிப்பதிவு, செட்டில் சூட்டிங், வெளிப்புற சூட்டிங், எடிட்டிங், டப்பிங், ரீ ரிக்காட்டிங், மிக்சிங், முதல் பிரதி, சென்ஸார், ஏப்ரல் 14–ல் படத்தை வெளியிடலாம் என்று அவ்வளவு கச்சிதமாக எழுதி எங்களிடம் கொடுத்தார். திரை உலகுக்கு இது ஒரு நல்ல உதாரணம். இப்படி திட்டமிட்டு செயல்படுவது பாராட்டுக்குரியது.

வழக்கமாக படங்களுக்கு இசை வெளியீட்டு விழா தான் வைப்பார்கள். நாங்கள் புதுமையாக ஜெமினி படத்திற்கு ‘அறிமுக விழா’ வைத்தோம். ஓட்டல் தாஜ் கன்னிம£ராவில் சிறப்பான விழா. என் மகன் குகன் முன்னிருந்து எல்லா ஏற்பாடு களையும் செய்தார்.

திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தியது. அவர்களில் எங்கள் வீட்டுப்பிள்ளை கமல், பாரதிராஜா, வைரமுத்து, பாலமுருகன், பரத்வாஜ்,   ஜீ.வி., கே.ஆர்., பஞ்சு, பார்த்திபன், ராம.நாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஏ.சி.திருலோகசந்தர், ஏ.எம்.ரத்னம், அபிராமி ராமநாதன், கே.எஸ்.ரவிக் குமார், எல்.சுரேஷ், முக்தா சீனிவாசன் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக தயாரிப்பாளர் என்ற முறையில் என்னிடம் டைரக்டர் சரண், தான் எழுதிய திரைக்கதை, வசன ஸ்கிரிப்டை கொடுத்தார். பரத்வாஜூம், வைரமுத்துவும் தாங்கள் ஒலிப்பதிவு செய்திருந்த ஆறு பாடல்களை என்னிடம் கொடுத்தார்கள்.

இயக்குனர் சரண் தயாரித்த இந்தப் படத்தின் டீசர் போட்டுக் காட்டப்பட்டது. இதில் சியான் விக்ரம், கிரண் வித்தியாசமான போஸ்கள், பரத்வாஜ் கம்போசிங்கில் வைரமுத்து எழுதிய ‘பெண் ஒருத்தி பெண் ஒருத்தி’ என்ற பாடலை எல்லாம் சேர்த்திருந்தார்கள்.

இவைகளைப் பார்த்த பாரதிராஜா இப்படி திட்டமிட்டு படமெடுக்கும் ஏவி.எம்.மையும், சரணையும் வெகுவாகப் பாராட்டினார். இதனை எல்லோரும் பின்பற்ற வேண்டுமென்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, ‘ஆலமரத்துக்கு ஒரு சிறப்பு குணமுண்டு. ஆலமரத்தின் ஆணி வேர்கள் பழுதுபட்டால் அதன் விழுதுகள் அந்த மரத்தைக் காப்பாற்றும். அதைப்போல் ஏவி.எம் என்ற ஆலமரத்தை வளர்த்தவர் கலை மேதை ஏவி.எம். அந்த ஆணிவேர் மறைந்தபின் அவர் வாரிசுகள் விழுதாக இருந்து ஏவி.எம்–யை காப்பாற்றுகிறார்கள்’ என்றார்.

விழாவுக்குப் பிறகு படப்பிடிப்பு சூடு பிடித்தது. பரத்வாஜ் இசையில் ‘ஓ போடு’ என்று ஒரு பாட்டு. இந்த வரியை சரண்தான் சொன்னார். அவர் அண்ணன் மகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில், மாணவர்கள் இடையே சொல்வது என்று கூறி பாட்டின் முதல் வரியாக சேர்த்தார். பாட்டு மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலுக்கு பரிசு போட்டி ஒன்று வைத்து வெற்றி பெற்ற வர்களுக்கு ஒரு கடிகாரம் பரிசாகக் கொடுத்தோம். அந்த கடிகாரத்தில் ரிங்டோனாக ‘ஓ போடு’ என்று வைத்து கொடுத்தோம். அது குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. பரிசு பெற்ற குழந்தைகளுடன் விக்ரம் கலந்து கொண்டு, ஒவ்வொரு குழந்தையுடனும் ‘ஓ போடு’ பாடலுக்கு நடனம் ஆடி குழந்தைகளை மகிழ்வித்தது மறக்க முடியாத நிகழ்வு.

‘ஓ போடு’ பாடலை ஒரு முறை ரஜினிக்கு போட்டு காண்பித்தோம். பாட்டை பார்த்தவுடன் ‘சார் இந்த படம் நிச்சயம் ஹிட் ஆகும்’ என்றார்.

‘எப்படி சார் சொல்றீங்க?’ என்று கேட்டேன்.

‘இந்த பாட்டை பார்த்தவுடன் எனக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றுகிறது’ என்றார். அவர் சொன்னது போலவே படம் நன்றாக ஓடியது.

‘கட்ட கட்ட நாட்டு கட்ட’ என்று ஒரு பாடல். அதில் சில வரிகளை சென்சாரில் ஒப்புக் கொள்ள வில்லை. நாங்கள் அந்த வரிகளை மியூட் பண்ணி ஒப்புதல் வாங்கி ரிலீஸ் செய்தோம். ஆனால் ஜனங்க அதை கவனிக்கவில்லை. ஏனென்றால் பாட்டில் உள்ள பீட் அந்த மாதிரி இருந்தது.

‘தீவானா..’ என்ற பாடலை செட்டுக்குள் எடுத்தோம். ரொம்ப நல்லா வந்தது. தோட்டா தரணி ரொம்ப அருமையாக செட் போட்டு இருந்தார். கேமராமேன் வெங்கடேஷ் ரொம்ப நல்லா ஒளிப்பதிவு செய்தார். ‘பெண் ஒருத்தி’ பாட்டை சுவிட்சர்லாந்தில் எடுத்தோம். பனிக்கட்டிகளுக்கு மத்தியில் மிகவும் அழகாக அந்த பாடல் காட்சி எடுக்கப் பட்டிருந்தது.

மலையாள நடிகர் முரளி ஒரு போலீஸ் அதிகாரி. அவர் படம் முழுக்க நல்ல அதிகாரி போலவும், கிளைமாக்சில் அவர்தான் வில்லன் என்பது போலவும் கதை இருந்தது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நான் சரணிடம் ‘நீங்கள் கதாசிரியர் பீட்டர் செல்வகுமாருடன் இருந்து அந்த கிளைமாக்ஸை சரி செய்யுங்கள்’ என்றேன்.

அதற்கு அவர் ‘சார் அவர் பழைய ஆள் சார். எனக்கு சரியா வராது’ என்றார். நான் விடாது சொன்னவுடன் ‘சரி’ என்றார். பீட்டர் சாரும் சரணும் சேர்ந்து பேசினர்.

பீட்டர் சொன்னார். ‘ஜனங்களை ஏமாத்தினா ஒத்துப்பாங்க.. முட்டாள் ஆக்கினா ஒத்துக்க மாட்டாங்க’ என்றார். படத்தில் ட்விஸ்ட் இருந்தால் ஜனங்க ரசிப்பாங்க. ஆனால் இவ்வளவு நேரம் பார்த்தவன் நல்லவன் இல்லை.. கெட்டவன்னு சொன்னால், அது அவங்களை முட்டாள் ஆக்குகிற வி‌ஷயம். அது வெற்றிபெறாது’ என்றார். கிளைமாக்சில் பீட்டர் செல்வகுமார் செய்த மாறுதல் மிகச் சிறப்பாக அமைந்தது. எப்பொழுதும் மூத்தவர்களின் கருத்துகளை கேட்பது, படத்தில் புகுத்துவது தவறில்லை என்பது என்னுடைய கருத்து.

இந்தப் படத்தின் எடிட்டர் சுரேஷ் அர்ஸ். ஆனால் டிரெய்லர் எடிட் செய்தது ஆண்டனி. அவர் 30 நொடியில் ‘ஓ போடு’ பாடலை எடிட் பண்ணியது மிகவும் ரசிக்கும்படி இருந்தது. தொலைக்காட்சிகளில் அது ஒளிபரப்பானதும் பிரபலமானது. இந்த படத்திற்கு பெரிய அளவில் ஓப்பனிங் வந்ததற்கு காரணம், இந்த 30 நொடி பிரமோ தான். இதற்கு முழுக் காரணம் எடிட்டர் ஆண்டனி. அவர் அந்த சமயத்தில் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இப்பொழுது பெரிய படங் களுக்கு எடிட்டராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

ஏப்ரல் 14–ந் தேதி ‘ஜெமினி’ படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஏப்ரல் 12–ந் தேதியே வெளியிட்டுவிட்டோம். இதற்கு குழுவின் ஒருமைப்பாடே காரணம். ஜெமினி 125 நாட்கள் ஓடியது. வெற்றி விழாக் கொண்டாடினோம். விநியோகஸ்தர்களுக்கு குறைந்த விலைக்கே கொடுத்திருந்தோம். அவர்கள் எல்லோரும் தங்களுக்கு ‘லாபம்.. லாபம்’ என்று கூறி ‘ஓ’ போட்டார்கள். ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட ‘மகிழ்ச்சி’ என்ன இருக்க முடியும்.

இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிட நினைத்து டப் செய்தோம். ஆனால் விநியோகஸ்தர்கள் படத்தைப் பார்த்து விட்டு, இதை தெலுங்கில் ரிமேக் செய்யலாம் என்று யோசனை சென்னார்கள். அதனால் வெங்கடேஷ், நமீதா இருவரையும் போட்டு தெலுங்கில் படத்தை எடுத்தோம். அந்தப்படமும் வெற்றிபெற்றது.

–அடுத்த வாரம்: பிரியத்தைச் சொன்ன  ‘பிரியமான தோழி’.

மனோரமாவிடம் பெற்ற கால்ஷீட்

படத்தின் வசனப் பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பாட்டு மட்டும் எடுக்க வேண்டியிருந்தது. அதற்காக அனைவரும் வெளிநாடு சென்றிருந்தனர். அதே நேரத்தில் இங்கு எடிட்டிங் முடிந்தவுடன், டம்மி வாய்ஸ் போட்டு டப்பிங் செய்து முழு படத்தையும் பார்த்தேன். படம் திருப்தியாக இருந்தது. ஆனால் ஏவி.எம். படங்களில் வரும் சென்டிமெண்ட் சீன்கள் இல்லை. இது பற்றி இயக்குனர் சரணிடம் தொலைபேசியில் பேசினேன். மனோரமாவை வைத்து சென்டிமெண்ட் காட்சிகளை எடுக்கலாம் என்றேன்.

உடனே அவர், ‘சார் நீங்கள் மனோரமாவிடம் நான் சொல்லும் தேதியை வாங்கி வையுங்கள். நான் வந்ததும் உங்களுக்கு கதையில் சேருகிற மாதிரி சீன் சொல் கிறேன்’ என்றார்.

நான் உடனே மனோரமாவிடம் பேசினேன். ‘எங்கள் படத்தில் நடிக்க 4 நாட்கள் கால்ஷீட் வேண்டும்’ என்றேன். உடனே தருவதாக ஒப்புக் கொண்டார்.

‘எவ்வளவு சம்பளம்’ என்றேன்.

‘ஏவி.எம்மில் 27 படங்கள் நடித்திருக்கிறேன். சம்பளம் பேசியது இல்லை. அதுவும் இல்லாமல் இந்த பாத்திரம் நான் செய்தால் நல்லா இருக்கும் என்று என்னை கேட்கிறீர்கள். அதனால் என்ன கொடுத்தாலும் நான் வாங்கிக்கிறேன்’ என்றார்.

4 நாட்கள் நாங்கள் கால்ஷீட் வாங்கியிருந்தாலும், சரண் ஒரே நாளில் காலை 7 மணிக்கு ஆரம்பித்து இரவு 9 மணிக்குள் ஆறு சீனை எடுத்தார். இந்த சீன் படம் முழுவதும் வரும். படத்திற்கு திருப்பு முனையாகவும் இருக்கும். படத்தில் சென்டிமெண்ட் காட்சிகள் திருப்தியாக அமைந்தன. அதற்கு இயக்குனர் சரண்தான் காரணம்.

Next Story