மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 28 July 2024 9:52 AM GMT (Updated: 28 July 2024 10:03 AM GMT)

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சேலம்,

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து 1 லட்சத்து 66 ஆயிரத்து 234 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.47 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசகன், டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருவதால் எப்போது தண்ணீர் திறக்கலாம்?, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். முதற்கட்டமாக 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தைப் பொறுத்து நீர்திறப்பின் அளவு அதிகரிக்கக் கூடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாநில மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்கள் 1070, 1077 ஆகிய எண்களிலும், 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story