வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. பேரிடர் துறை கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்


வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. பேரிடர் துறை கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்
x

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பென்னாகரம்,

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு தொடர் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நிரம்பும் கட்டத்தை நோக்கி வருகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.47 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது நீர்வரத்து 1.51 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.20 அடியில் இருந்து 110.76 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் ஒட்டுமொத்த நீர் இருப்பு 79.49 டிஎம்சி ஆக உள்ளது. குடிநீர் தேவைக்கு அணை மின் நிலையம் வாயிலாக நீர் திறப்பு வினாடிக்கு 5,000 கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணை திறக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளார்.

இதன்படி காவிரி ஆற்றில் நீர் திறப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான எச்சரிக்கை செய்திகளை மக்களுக்கு உரிய நேரத்தில் சேர்க்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும், பேரிடர் பாதிப்பு தொடர்பாக மக்கள் 1070, 1077, 94458 69848 ஆகிய தொடர்பு எண்களை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Next Story