சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னை,
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தாலும், சில இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. மேலும், தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.
சென்னையை பொறுத்தவரை, கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது. அடையாறு, மெரினா, தரமணி, வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம், நுங்கம்பாக்கம், வடபழனி, தாம்பரம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. தொடர்ந்து வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மழை பெய்துள்ளதால், சென்னையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.