மகளிர் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
அகமதாபாத்,
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் சோபி டிவைன் 79 ரன்களும், சுசி பேட்ஸ் 58 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 47.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 183 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 48 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக லீ தகுகு மற்றும் சோபி டிவைன் தலா 3 விக்கெட்டுகளும், ஈடன் கார்சன் மற்றும் ஜெஸ் கெர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.