பெர்த் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியாவை 150 ரன்களில் சுருட்டிய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - கே.எல். ராகுல் களமிறங்கினர். ஆஸ்திரேலிய தரப்பில் முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா விரைவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய படிக்கல் 23 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகினார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி (5 ரன்கள்) 12 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ஹேசில்வுட் வீசிய பவுன்சர் பந்தில் விக்கெட்டை தாரை வார்த்தார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கே.எல். ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இருப்பினும் 74 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 26 ரன்களில் இருந்தபோது நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துருவ் ஜூரல் தாக்குப்பிடிக்கவில்லை. 11 ரன்களில் வீழ்ந்தார்.
பின்னர் கை கோர்த்த ரிஷப் பண்ட் - அறிமுக வீரர் நிதிஷ் ரெட்டி இணை பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டது. ஒரு கட்டத்தில் இந்தியா 100 ரன்களை கடக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில் இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. ரிஷப் பண்ட் தனது பங்குக்கு 37 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் களமிறங்கிய வீரர்கள் யாரும் பெரிதாக விளையாடவில்லை. வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும், ராணா 7 ரன்களிலும், பும்ரா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதிஷ் ரெட்டி 41 ரன்களில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
முடிவில் 49.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.