சொந்த மண்ணில் முதல் முறையாக கோல்டன் டக் அவுட் ஆன ஸ்மித்
முதல் நாளில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது
பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ரெட்டி 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் எடுத்தனர்
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கேப்டன் பும்ரா பதிலடி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கவாஜா 8 ரன்களிலும், நாதன் மெக்ஸ்வீனி 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தை கோல்டன் டக் ஆக்கி வெளியேற்றினார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹர்ஷித் ராணா, டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்டாக்கினார். சிராஜ் தனது பங்குக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் லாபுசாக்னே விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
முதல் நாளில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும், ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.
இந்த நிலையில், இந்த போட்டியில் கோல்டன் டக் அவுட் ஆகியதால் , முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் ஸ்டீவ் ஸ்மித் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார் .