வங்காளதேசத்திற்கு எதிரான வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் கூறியது என்ன..?

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

Update: 2024-09-22 08:56 GMT

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தனது 2வது இன்னிங்சில் 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் சாண்டோ தனி ஆளாக போராட, மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இறுதியில் வங்காளதேச அணி 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக சாண்டோ 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "உண்மையிலேயே இந்த வெற்றி மிக மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாங்கள் விளையாடிய இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த போட்டியின்போது ரிஷப் பண்ட் இரண்டாவது இன்னிங்சில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார். கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்த அவர் இப்படி ஒரு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் மிகவும் விரும்பி விளையாடுகிறார். இனியும் அவரது இந்த பேட்டிங் தொடரும் என்று நினைக்கிறேன்.

அதே போன்று துலீப் டிராபியில் விளையாடியதால் நமது அணியின் வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடுவது எளிதாக உள்ளது. இந்தியாவில் விளையாடினாலும் சரி, வெளிநாட்டில் விளையாடினாலும் சரி நமது அணியின் பந்துவீச்சு தற்போது மிகச்சிறப்பாக இருக்கிறது. அதன் காரணமாகவே வெற்றிகள் குவிந்து வருகின்றன. சென்னை மைதானத்தில் அஸ்வின் விளையாடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்