டி20 போட்டிகள்: முடிவுக்கு வந்த சகாப்தம்... ஆட்ட நாயகன் விருதுடன் ஓய்வை அறிவித்த விராட் கோலி
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பார்படாஸ்,
பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
முக்கிய கட்டத்தில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், நங்கூரமாய் நின்று அணியின் ஸ்கோர் உயர கோலி முக்கிய பங்காற்றினார். அவர் 59 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்தார். கோலியின் ஆட்டத்தால் இந்திய அணியால் கவுரவமான ஸ்கோரை ஏட்ட முடிந்தது.
இந்த நிலையில் போட்டி முடிந்ததும் ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. அப்போது டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கோலி கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது;
இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை போட்டி. இந்த வெற்றியைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். இந்தியாவுக்காக விளையாடும் கடைசி டி20 போட்டியும் இதுதான். கோப்பையை வெல்ல விரும்பினோம்.
அடுத்த தலைமுறை இந்திய டி20 ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய நேரம். ஐசிசி போட்டியில் இந்த வெற்றியைப் பெறுவதற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். இது எனக்கு ஆறாவது டி20 உலகக்கோப்பைதான். ஆனால் ரோகித் சர்மாவுக்கு இது 9 ஆவது உலகக்கோப்பை. அணியில் உள்ள மற்றவர்களை போலவே அவரும் இந்த வெற்றிக்கு தகுதியானவர்.
தொடர் சிறப்பாக முடிந்ததில் மகிழ்ச்சி. தற்போது எனது உணர்வுகளை விளக்குவது மிகவும் கடினம். இது ஒரு அற்புதமான நாள்."
இவ்வாறு அவர் கூறினார்.