அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் விராட் கோலி - எம்.எஸ்.தோனி
வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன;

Image Courtesy: @IPL / @ChennaiIPL / @RCBTweets
சென்னை,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் நடந்துள்ளன. இந்த தொடரில் வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
விராட் - தோனி நேருக்கு நேர் சந்திப்பதால் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இந்நிலையில், நேற்றைய சென்னை-மும்பை ஆட்டத்திற்கு பின்னர் தனியார் நிகழ்ச்சியில் பேசிய தோனியிடம், விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து தோனி கூறியதாவது,
விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே என்னுடன் விளையாடியுள்ளார். விராட் கோலி அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 50-60 ரன்கள் அவருக்கு போதாது. எப்போதும் சதம் அடிக்க வேண்டும். அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றே இருப்பார். இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார்.
அவர் அவ்வப்போது என்னிடம் வந்து, 'வேறு ஏதாவது வித்தியாசமாகச் செய்ய விரும்புகிறீர்களா?' என்று கேட்பார். நான் எப்போதும் என் நேர்மையான கருத்தைத் தெரிவிப்பேன். அதனால்தான் எங்களுக்குள் பிணைப்பு வளர்ந்தது. தற்போது இருவரும் கேப்டன் இல்லை. எனவே போட்டிகளுக்கு முன் நீண்ட நேரம் பேச முடிகிறது.
இன்னும் எங்களுக்கிடையில் ஒரு கோடு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒரு மூத்த மற்றும் இளைய வீரருக்குள் இருக்கும் மரியாதையும், நட்பும் எங்களுக்குள் உள்ளது. ஆனால், நாங்கள் இன்னும் நண்பர்களாகவே இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.