கொல்கத்தாவுக்கு எதிரான தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் - ராஜஸ்தான் கேப்டன்
கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியை தழுவியது.;

image courtesy:twitter/@IPL
கவுகாத்தி,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 33 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 97 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். நடப்பு தொடரில் கொல்கத்தாவுக்கு இது முதல் வெற்றியாகும். ராஜஸ்தானுக்கு 2-வது தோல்வியாகும்.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் அளித்த பேட்டியில், " இந்த மைதானத்தில் 170 ரன்கள் என்பது உண்மையிலேயே நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். நான் கொஞ்சம் அவசரப்பட்டு ஆட்டமிழந்து விட்டேன். 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். குயின்டன் டி காக்கை சீக்கிரமே அவுட் செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம், ஆனால் அது நடக்கவில்லை. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம். அவர் மிகவும் நன்றாக விளையாடினார், எனவே அவருக்கு பாராட்டுகள்.
கடந்த ஆண்டு, அணி நான் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது, அதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்த ஆண்டு, அவர்கள் என்னை 3வது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறார்கள். எனவே எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய நான் தயாராக இருக்க வேண்டும், அதனால் நான் அதை ஒப்புக்கொள்கிறேன். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எங்களிடம் சிறந்த அணி உள்ளது" என்று கூறினார்.