சென்னை - பெங்களூரு ஆட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்..? ஆஸி.முன்னாள் வீரர் கணிப்பு

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை - பெங்களூரு ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.;

Update:2025-03-27 17:22 IST
சென்னை - பெங்களூரு ஆட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்..? ஆஸி.முன்னாள் வீரர் கணிப்பு

image courtesy: PTI

சிட்னி,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இதில் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் ஆட்டங்களில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வெள்ளி கிழமை) நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெறுவது கடினம் என்று ஆஸ்திரேலியா மற்றும் ஐ.பி.எல். தொடரில் சென்னை, பெங்களூரு அணிகளுக்காக விளையாடிய முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் கணித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து அவர் பேசுகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருக்கும் பந்து வீச்சாளர்களின் தரத்தை கருத்தில் கொண்டால், பெங்களூரு வெல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சென்னை அணியின் பலத்தை எதிர்கொள்ள பெங்களூரு அணியில் மாற்றம் செய்வார்கள். ஆனால் சென்னை அணியின் கோட்டையான சேப்பாக்கத்தில் எந்த தவறும் செய்யாதீர்கள்.

சேப்பாக்கத்தில் சிறந்து விளங்குவதை மையமாகக் கொண்டுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அமைப்பும் கட்டமைக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அற்புதமாக பந்து வீசிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் நூர் அகமது ஆகியோரை பாருங்கள். அவர்கள் இங்கு நிச்சயம் சவாலாக இருப்பார்கள். நூர் அகமது தனது முதல் ஆட்டத்திலேயே இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும்" என்று கூறினார்.

நடப்பு தொடரில் இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்