சஞ்சு சாம்சன் அரைசதம்.... ஜிம்பாப்வேவுக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா

இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 5-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

Update: 2024-07-14 12:38 GMT

image courtesy: twitter/@BCCI

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கெய்க்வாட் மற்றும் கலீல் அகமது நீக்கப்பட்டு முகேஷ் குமார் மற்றும் ரியான் பராக் அணியில் இடம்பிடித்தனர்.

இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் இன்னிங்சின் முதல் பந்தையே சிக்சருக்கு விளாசி அதிரடியாக ஆரம்பித்தார். அது நோபாலாக மாற அடுத்த பந்தையும் சிக்சராக மாற்றினார். ஆனால் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. முதல் ஓவரின் 4-வது பந்திலேயே கிளீன் போல்டானார். அவரை தொடர்ந்து கில் 13 ரன்களிலும், அபிஷேக் சர்மா 14 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்தியா நெருக்கடிக்குள்ளானது.

இதன்பின் ஜோடி சேர்ந்த பராக் - சாம்சன் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். நிதானமாக விளையாடிய பராக் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் துபே (26 ரன்கள் 12 பந்துகளில்) அதிரடியாக விளையாட இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே பேட்டிங் செய்ய உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்