டி20 அணியில் நான் இல்லாததில் ஆச்சரியமில்லை - பவுமா பேட்டி

தென் ஆப்பிரிக்க டி20 அணியில் நான் இல்லாததில் ஆச்சரியமில்லை என டெம்பா பவுமா கூறியுள்ளார்.

Update: 2024-08-16 12:04 GMT

கோப்புப்படம்

கயானா,

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கயானாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 23ம் தேதி (இந்திய நேரப்படி 24ம் தேதி) தொடங்குகிறது.

இதையடுத்து இந்த டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தென் ஆப்பிரிக்க டி20 அணியின் முன்னாள் கேப்டனாக டெம்பா பவுமாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், டி20 அணியில் நான் இல்லாததில் ஆச்சரியமில்லை என்றும், ஒருவேளை டி20 அணியில் நான் இருந்திருந்தால் அது பலரது புருவத்தை உயர்த்தும் வகையில் அமைந்திருக்கும் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நான் தென் ஆப்பிரிக்க டி20 அணியில் இல்லாததில் ஆச்சரியமில்லை. ஒருவேளை டி20 அணியில் நான் இருந்திருந்தால் அது பலரது புருவத்தை உயர்த்தும் வகையில் அமைந்திருக்கும். இதனால் நான் அங்கு (டி20 அணியில்) இல்லாததே நல்லது. இப்போது எனது கவனம் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது.

என்னால் முடிந்தவரை அணிக்காக சிறப்பாக விளையாட முயற்சிக்கிறேன். அடுத்த சில மாதங்களில் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. நான் நம்பக் கூடிய விஷயம் என்னவென்றால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் நான் நன்றாக விளையாடினால் மற்ற அனைத்து விஷயங்களும் தானாகவே மாறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்