அடுத்த மாதம் 17ம் தேதி... வான்கடே மைதானத்தில் இந்த சாதனை நிகழும் - டேல் ஸ்டெயின் கணிப்பு
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.;

கோப்புப்படம்
கேப்டவுன்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் நடந்துள்ளன. இந்த தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 286 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் 242 ரன்கள் மட்டுமே அடிக்க 44 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி உலக சாதனை ஒன்றை படைத்தது. அதாவது, டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 250 ரன்களுக்கு (4 முறை) மேல் அடித்த அணியாக ஐதராபாத் சாதனை படைத்தது.
கடந்த ஆண்டு முதலே மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சன்ரைசர்ஸ் அணி வெகு விரைவில் ஒரு இன்னிங்சில் 300 ரன்கள் அடிக்கும் என்று பலரும் பேசி வருகின்றனர். அதற்கு காரணம் அந்த அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் அமைக்கும் அதிரடியான துவக்கமும் அதன் பின்னர் தொடர்ச்சியாக இஷான் கிஷன், நித்திஷ் ரெட்டி, கிளாசன் போன்ற அதிரடியான பேட்டிங் வரிசையும் காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் 17ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் ஐ.பி.எல் தொடரில் ஒரு இன்னிங்சில் முதல் முறையாக 300 ரன்களை நாம் பார்க்கலாம் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
இது என்னுடைய சிறிய கணிப்பு தான். அடுத்த மாதம் 17ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் ஐ.பி.எல் தொடரில் ஒரு இன்னிங்சில் முதல் முறையாக 300 ரன்களை நாம் பார்க்கலாம். யாருக்கு தெரியும் அந்த போட்டியின் போது நான் நேராக மைதானத்தில் இருந்து கூட அதை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.