பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள்; சாதனை படைத்த அமெலியா கெர்
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
துபாய்,
9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா (பி பிரிவு) அணிகள் தங்கள் பிரிவில் முறையே 'டாப்-2' இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
முதலாவது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும், 2-வது அரையிறுதியில் நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 32 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அமெலியா கெர் இந்த தொடரில் 6 ஆட்டங்களில் ஆடி மொத்தம் 15 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் பெண்கள் உலகக்கோப்பை தொடர் ஒன்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு இங்கிலாந்தின் அன்யா ஸ்ருப்சோல் 2014-ம் ஆண்டிலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் 2020-ம் ஆண்டிலும் தலா 13 விக்கெட் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.