ஐ.பி.எல். 2025: சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது..? - கங்குலி அளித்த பதில்

வருண் சக்ரவர்த்தி முன்பை விட சிறப்பாக பந்துவீசி வருவதால் அவர் அதிக விக்கெட்டை வீழ்த்த வாய்ப்பு உள்ளது என கங்குலி கூறியுள்ளார்.;

Update:2025-03-22 19:35 IST
ஐ.பி.எல். 2025: சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது..? - கங்குலி அளித்த பதில்

image courtesy; @IPL

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் 'பி' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை, மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் லீக்கில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது?, யார் அதிக விக்கெட் வீழ்த்துவார்கள்?, யார் அதிக ரன்கள் அடிப்பார்கள்? என்பது குறித்த கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்த ஐ.பி.எல் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும்? என்பது குறித்த தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த ஐ.பி.எல் தொடரில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை இப்போதே கூற முடியாது. ஏனெனில் ஐ.பி.எல் தொடரானது மிக நீண்ட தொடர். அதே போன்று இந்த தொடரில் வெற்றி பெற அனைத்து அணிகளுமே கடுமையாக போட்டி போடும் என்பதனால் தொடரின் ஆரம்பத்திலேயே வெற்றியாளரை கணிப்பது கடினம். ஆனால் தொடர் பாதியை கடக்கும் போது நிச்சயமாக யார் வெற்றிபெறுவார்கள் என்று கூறமுடியும்.

அதே வேளையில் இந்த தொடரை பொறுத்தவரை நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இந்த முறையும் கோப்பையை வெல்லும் அளவிற்கு வலிமையான அணியாக இருக்கிறது. நிச்சயம் இந்த முறையும் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதே போன்று ஆர்.சி.பி அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் போட்டியில் நிச்சயமாக கொல்கத்தா அணி தான் வெற்றி பெறும்.

ஏனெனில் தற்போதைய கொல்கத்தா அணி கடந்த ஆண்டு விட இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும். அதே போன்று வருண் சக்ரவர்த்தி முன்பை விட சிறப்பாக பந்துவீசி வருவதால் அவர் அதிக விக்கெட்டை வீழ்த்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்