ஐ.பி.எல்.: பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு
அகமதாபாத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதுகின்றன.;
Image Courtesy: IPL
அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் சும்பன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் சுப்மன் கில், ரஷித் கான், பட்லர், சிராஜ், ரபடா என திறமையான வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். அவர்களுடன் தமிழக வீரர்களான ஷாருக்கான், சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தரும் இடம் பெற்றுள்ளனர். அனைவரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அது நிச்சயம் குஜராத் அணிக்கு வலுவானதாக அமையும்.
மறுபுறம் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் கேப்டனாக்கி உள்ளது. மேலும் மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்லிஸ், ஷசாங்க் சிங் என அதிரடியான பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்கின்றனர். அத்துடன் சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சன் என சிறப்பான பந்துவீச்சாளர்களும் உள்ளதால் இம்முறை பஞ்சாப் வலுவான அணியாக உள்ளது.
ஏறக்குறைய சரி சமமான இரு அணிகளும் மோத உள்ளதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.