லக்னோவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றுவிட்டதால்... - அக்சர் படேல் பேட்டி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின.;

Update:2025-03-25 16:32 IST
லக்னோவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றுவிட்டதால்... - அக்சர் படேல் பேட்டி

Image Courtesy: @IPL / @DelhiCapitals

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 209 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நிக்கோலஸ் பூரன் 75 ரன், மிட்செல் மார்ஷ் 72 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த டெல்லி 65 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களம் புகுந்த அசுதோஷ் சர்மா அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதியில் டெல்லி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்னும், விப்ராஜ் நிகாம் 15 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது அசுதோஷ் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் டெல்லி கேப்டன் அக்சர் படேல் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இது போன்ற போட்டிகளை பார்த்துப் பழகி விட்டேன். என்னுடைய கேப்டன்ஷிப்பில் மட்டுமே இப்படி ஏற்ற இறக்கங்கள் நடக்கிறது. இம்முறை நாங்கள் வெற்றி பெற்றதால் ஸ்டப்ஸ்க்கு ஏன்? அந்த ஓவரை கொடுத்தீர்கள் என்று மக்கள் யாரும் புகார் சொல்ல மாட்டார்கள். பவர் பிளே ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்தும் கடைசியில் வெற்றி பெறுவதை அதிகம் பார்க்க முடியாது.

கடைசியாக அதை எப்போது பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை. முதல் 6 ஓவர்களில் லக்னோ பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதத்தை பார்த்த போது நாங்கள் கொஞ்சம் அதிக ரன்கள் வழங்கி விட்டோமோ? என்று நினைத்தோம். நாங்கள் சில முக்கிய கேட்ச்களையும் விட்டோம். அதனால் அவர்கள் 230 - 250 ரன்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கடைசியில் அவர்களை 209 ரன்னுக்கு கட்டுப்படுத்தியது எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது.

கடினமாக உழைக்கும் எங்களுடைய வீரர்களிடம் திறன் இருக்கிறது என்பது தெரியும். முதல் போட்டியிலேயே இப்படி அழுத்தமான சூழ்நிலையில் பேட்டிங் செய்தது தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. விப்ராஜ் நிகாம் விளையாடிய விதத்திற்கு பாராட்டுகள் கொடுக்க வேண்டும். எங்கள் வீரர்கள் இப்படியே தொடர்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்