ரூ. 520 கோடி இருந்தாலும் அவரை ஏலத்தில் வாங்க முடியாது - இந்திய வீரருக்கு நெஹ்ரா புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.;

Update:2024-12-02 08:40 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 6-ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த முதல் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விலகியிருந்ததால் அவருக்கு பதிலாக பும்ரா கேப்டன்சி செய்து இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி வெற்றியை தேடித்தந்தார். ஒரு கேப்டனாகவும், ஒரு பந்துவீச்சாளராகவும் அவர் அந்த போட்டியில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதனால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா பும்ரா பற்றி மிக உயர்வாக பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில்,

"ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்காதபோது பொறுப்பு கேப்டனாக இருந்து பும்ரா செயல்பட்ட விதம் மிகச்சிறப்பாக இருந்தது. அவர் அற்புதமாக வழிநடத்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று தோல்விகள் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை தந்த வேளையில் தற்போது இந்த வெற்றி இந்திய அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்திருக்கும்.

அதிலும் குறிப்பாக கேப்டனாகவும், ஒரு வேகப்பந்து வீச்சாளராகவும் அவர் செயல்பட்ட விதம் உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம். இதற்கு முன்னர் இதேபோன்று அவர் பலமுறை செய்துள்ளார். ஆனாலும் தற்போது பல அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய அணியை சரியாக கையாண்டு உள்ளார் என்று நினைக்கிறேன்.

பும்ராவை போன்ற ஒரு வீரரை எப்போதுமே குறைத்து மதிப்பிட முடியாது. ஒருவேளை பும்ரா ஐ.பி.எல். ஏலத்தில் வந்திருந்தால் ரூ.520 கோடிகள் இருந்தால் கூட அவரை போன்ற ஒரு வீரரை வாங்க முடியாது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்