ரோகித் இல்லை... இந்திய டெஸ்ட் அணியில் இனி அவர்தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - மஞ்ரேக்கர்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் மொத்தம் 276 ரன்கள் அடித்தார்.;

Update:2025-01-07 11:05 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் தோல்வியை தழுவியது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, அதற்கடுத்த 4 டெஸ்டில் 3 தோல்வி கண்டது. ஒரு போட்டி சமனில் முடிந்தது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்து வெளியேறிய இந்தியா கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த தொடரில் ரோகித், விராட் போன்ற முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில் கே.எல். ராகுல் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினார். இந்த தொடரில் 30.76 என்ற சராசரியுடன் 276 ரன்கள் குவித்தார். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரோகித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியதால் 3-வது இடத்தில் இறங்கிய ராகுல் சிறிது தடுமாற்றம் கண்டார். 

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இனி கே.எல். ராகுல்தான் நிரந்தர தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "கே.எல் ராகுல் பற்றி நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலிய தொடரின் ஆரம்பத்தில் அவர் மிகச்சிறப்பாக விளையாடியிருந்தார். பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் 80 ரன்கள் வரை அடித்த அவர் மற்ற போட்டியிலும் அதிக பந்துகளை எதிர்கொண்டு மிகச்சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆனாலும் அவர் தொடக்க வீரருக்கான இடத்தை விட்டு மீண்டும் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டபோது அவரது பேட்டிங் பார்ம் சரிந்தது. எனவே என்னை பொறுத்தவரை அவர் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக மட்டுமே விளையாட வேண்டும். இதன் காரணமாக ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்