ஒலிம்பிக்: இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் வீராங்கனை யார் தெரியுமா..?

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்னும் 6 தினங்களில் கோலாகலமாக தொடங்க உள்ளது.

Update: 2024-07-19 11:33 GMT

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதன் தொடக்க விழா முதல்முறையாக மைதானத்துக்கு வெளியே, அதாவது சென் நதியில் வித்தியாசமான முறையில் நடக்கிறது.

இதனையொட்டி இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் வீராங்கனை குறித்து இங்கு காண்போம்...!

27-வது ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரான சிட்னியில் 2000-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடந்தது. இதில் 199 நாடுகளைச் சேர்ந்த 10,651 வீரர், வீராங்கனைகள் 28 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண்: இந்த ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்கு ஒரே ஒரு பதக்கம் மட்டுமே கிட்டியது. பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 69 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஸ்னாட்ச் முறையில் 110 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 130 கிலோவும் என மொத்தம் 240 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கத்தை வென்று இந்தியாவின் பெயரை பதக்கப்பட்டியலில் இடம் பெற செய்தார்.

இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை ஆந்திராவைச் சேர்ந்த மல்லேஸ்வரி பெற்றார். இதில் சீன வீராங்கனை லின் வெய்னிங் (மொத்தம் 242.5 கிலோ) தங்கப்பதக்கமும், ஹங்கேரி வீராங்கனை எர்சாபெத் மார்கஸ் வெள்ளிப்பதக்கமும் (242.5 கிலோ) பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்