திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரத விழா.. ஏற்பாடுகள் தீவிரம்
பத்மாவதி தாயார் தங்கத் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.;
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரும் 16-ம் தேதி வரலட்சுமி விரத விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலையில் மூலவர் மற்றும் உற்சவ தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
அதன்பின்னர் உற்சவ தாயார், அலங்கரிக்கப்பட்ட ஆஸ்தான மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வரலட்சுமி விரத விழா மற்றும் பூஜைகள் நடைபெறும். பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் தீவிரமாக செய்துவருகின்றனர். இந்த விரதத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரு மேலாடை, ஒரு பிளவுஸ், ஒரு லட்டு மற்றும் ஒரு வடை ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும்.
மாலையில், பத்மாவதி தாயார் தங்கத் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வரலட்சுமி விரத விழாவை முன்னிட்டு, அபிஷேகம், அபிஷேகானந்தர தரிசனம், லட்சுமி பூஜை, குங்குமார்ச்சனை, வேதாசிர்சாச்சனம் பிரேக் தரிசனம், சஹஸ்ர தீபாலங்கார சேவை போன்ற ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
அன்றைய தினம், வரலட்சுமி அலங்காரத்தில் ஸ்ரீ பத்மாவதி தாயார் தரிசனம் கொடுப்பார். பஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தின்படி வழிபாடுகள் நடத்தப்படும். இந்த வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கு செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional