இனி வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு தடை இல்லை: இலங்கை முடிவு

இலங்கை அரசாங்கம் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதிகளை வைத்திருக்க முடியாது என வெளியுறவுத்துறை மந்திரி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-07 11:06 GMT

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்களை இலங்கை துறைமுகத்தில் நிறுத்தி ஆய்வு செய்ய இலங்கை அரசு அனுமதி அளித்தது. இந்த கப்பலைகளை இலங்கை அனுமதிக்கக்கூடாது என இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்தின. இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட 6 கடற்படை தளங்களை நவீனகருவிகள் மூலம் கண்காணிக்க வாய்ப்பு இருந்ததால் இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசாங்கம், இந்த ஆண்டின் துவக்கத்தில் சீனாவின் மற்றொரு ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து இந்தியா பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியது. இதையடுத்து வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசு தடை விதித்தது.

அதேசமயம், சீனா தரப்பில் இருந்து மீண்டும் ஆராய்ச்சிக் கப்பலுக்கான அனுமதி கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் வருகைக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்த ஆண்டு முதல் நீக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

"இலங்கை அரசாங்கம் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதிகளை வைத்திருக்க முடியாது. அதேசமயம் சீனாவை மட்டும் தடுக்க முடியாது. மற்றவர்களுக்கு இடையிலான பிரச்சினையில் இலங்கை எந்த பக்கமும் இருக்காது. அடுத்த ஆண்டு ஜனவரி வரை தடை அமலில் இருக்கும். அதன்பின்னர், வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை துறைமுகங்களில் நிறுத்துவதை இலங்கை தடை செய்யாது. இலங்கையில் பயன்படுத்தப்படாத கடல் வளங்கள் ஏராளமாக இருக்கின்றன. எனவே, ஆராய்ச்சி அவசியமானது. ஆனால் அது வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்." என ஜப்பான் ஊடகத்திடம் சப்ரி கூறியிருக்கிறார்.

நிதி நெருக்கடியில் உள்ள இலங்கை, தனது வெளிநாட்டு கடனை மறுசீரமைக்கும் முயற்சிகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் சமமான முக்கிய பங்குதாரர்களாக கருதுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்