பாகிஸ்தான்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரிகள் கைது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் 4 நகரங்களில் அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-10-05 01:26 GMT

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரிகளான அலீமா கான் மற்றும் உஸ்மா கான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கட்சி தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுபற்றி அவருடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி வெளியிட்டு உள்ள செய்தியில், அமைதியான போராட்டம் நடத்துவதற்கான உரிமையை மேற்கொண்டபோது, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது ஒரு பாசிச மற்றும் போலியான அரசு. குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் அவர்களிடம் இருந்து முற்றிலும் பறிக்கப்பட்டு விட்டன.

பாசிசத்தின் அனைத்து எல்லைகளையும் அரசு கடந்து விட்டது என தெரிவித்து உள்ளதுடன், சட்டவிரோத அதிகாரங்களை பராமரித்து கொள்வதற்காக அரசு, மக்களின் அடிப்படை உரிமைகளை தடுக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறது.

டி சவுக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அலீமா கானை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று அதே பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட உஸ்மா கானையும் போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் அவர்கள் இருவரும் செயலக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க பஞ்சாப் மாகாணத்தின் 4 நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த 144 தடையுத்தரவு நாளை வரை அமலில் இருக்கும் என பஞ்சாப் அரசு தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்