டிரம்ப் கோல்ப் விளையாடிய பகுதிக்கு அருகே துப்பாக்கி சூடு: ஒருவரிடம் விசாரணை - ஜோ பைடன் தகவல்

நான் பலமுறை கூறியது போல் அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-09-16 02:54 GMT

கோப்புப்படம் 

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இந்த சூழலில், சமீபத்தில் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் டிரம்ப் பங்கேற்றபோது, அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று டிரம்ப், மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது, திடீரென அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். டிரம்ப் இருந்த பகுதிக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான கொலை முயற்சி என சந்தேகிக்கப்படும் துப்பாக்கி சூடு குறித்து மத்திய சட்ட அமலாக்கப் பிரிவினர் என்ன விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறித்து எனது குழுவினரால் எனக்கு விளக்கப்பட்டது. சந்தேகத்துக்குரிய ஒரு நபர் காவலில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அதிபரையும் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

முன்னாள் அதிபருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதில் நான் நிம்மதியடைந்துள்ளேன். அமலாக்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, என்ன நடந்தது என்பது குறித்த கூடுதல் விவரங்களை சேகரித்து வருகின்றனர். நான் பலமுறை கூறியது போல், நம் நாட்டில் அரசியல் வன்முறைகள் உட்பட எந்தவிதமான வன்முறைகளுக்கும் இடமில்லை. முன்னாள் அதிபரின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்துமாறு எனது குழுவிற்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்