மாண்டெனேகுரோ நாட்டில் 12 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை
மாண்டெனேகுரோ நாட்டில் 12 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை செய்துகொண்டார்.;
போட்கோரிகா,
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாண்டெனேகுரோவில் உள்ள செடிஞ்ஜே என்ற நகரத்தில், மதுபான விடுதி ஒன்றில் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் 45 வயதான அகோ மார்டினோவிக் என்ற நபர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் மதுபான விடுதியின் உரிமையாளர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து அகோ மார்டினோவிக், மேலும் 3 இடங்களுக்கு சென்று கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதல்களில் மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற அகோ மார்டினோவிக்கின் இருப்பிடத்தை கண்டறிந்து போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது அகோ மார்டினோவிக், தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் மீது ஏற்கனவே சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட சிறிய நாடான மாண்டெனேகுரோவில், துப்பாக்கி கலாசாரம் அதிகமாக பரவியிருக்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டு இதே செடிஞ்ஜே நகரத்தில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.