காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 42 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர்.;
காசா முனை,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பிற்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், காசா முனையின் மத்திய காசா, நுசிரத், சவாடா, மஹானி, டிர் அல் பலாக் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, பணய கைதிகள் மீட்பு, போரை நிறுத்துவது தொடர்பாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் இந்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.