புயல் இன்று மாலை கரையை கடக்கிறது; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை
சென்னையில் காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில் புறநகர் மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கையாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் அணிவகுத்து நிற்கும் கார்கள்
புயல், மழையில் இருந்து கார்களை பாதுகாக்க மேம்பாலங்களில் உரிமையாளர்கள் கார்களை நிறுத்தி வைக்கின்றனர். அந்தவகையில் வேளச்சேரியின் இரண்டு மேம்பாலங்கள் மீதும் கார்களை நிறுத்தி வரும் வேளச்சேரி மக்கள். புயல் காரணமாக சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 7 செ.மீ. மழைப்பதிவு
திருவொற்றியூர் - 5 செ.மீ, தண்டையார்பேட்டை - 4.6 செ.மீ., மணலி 4.2 செ.மீ மழைப்பதிவு; சென்னையில் சராசரியாக 3.45 செ.மீ. மழைப்பதிவு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்
சென்னைக்கு வந்த 4 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன. புனே, குவைத், மஸ்கட், மும்பையில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் உள்ளன. சென்னையில் காற்றுடன் பலத்த மழை பெய்வதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 449 கன அடி நீர்வரத்து உள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடக்க தாமதமாகும்?
பெஞ்சல் புயல் கரையை கடக்க தாமதமாகும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள பெஞ்சல் புயல் கடந்த சில மணி நேரங்களாக 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கன மழை - விமான சேவை ரத்து
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, பெங்களூரு, அந்தமான் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், செங்குன்றம், சோழவரம் தலா 3 செமீ, பள்ளிப்பட்டு, பூவிருந்தவல்லி, பூண்டி தலா 2 செமீ மழை பதிவாகி உள்ளது.