பாதிப்புகளை படகில் சென்று ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு சேதங்களும் ஏற்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று படகில் சென்று பார்வையிட்டார்.
புதுச்சேரி கடற்கரை சாலை, வைத்திகுப்பம் கடற்கரை பகுதி, தேங்காய்திட்டு துறைமுகம் ஆகியவற்றை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து ஆரியபாளையம் மேம்பாலம், சங்கராபரணி ஆறு, வில்லியனூர் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேலும் கனகன் ஏரியைப் பார்வையிட்டார். அப்போது உள்துறை மந்திரி நமச்சிவாயம், மின்துறை தலைமை கண்காணிப்புபப் பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலையில் மிக கனமழை எச்சரிக்கை: அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 1077 மற்றும் 04175232377 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த 'பெஞ்சல்' புயல் நேற்று இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையக் கடந்த விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த சூழலில் பெஞ்சல் புயல் நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்திருந்தார்.
பெஞ்சல் புயல் முழுவதுமாக கரையை கடந்தநிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் மாவட்டங்கள் (அதி கனமழை)
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
கடலூர்
ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்கள் (மிக கனமழை)
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவண்ணாமலை,
தருமபுரி
சேலம்
பெரம்பலூர்
அரியலூர்
தஞ்சை
திருவாரூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் (கன மழை)
சென்னை
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
வேலூர்
கிருஷ்ணகிரி
ஈரோடு
நாமக்கல்
புதுக்கோட்டை
திருச்சி
நாளை 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஓங்கூர் ஆற்றங்கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. புதுப்பட்டு, விளாம்பட்டு, வெல்ல கொண்டாகரம், புதுக்குழி, ஆகிய ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. அதிகாரிகள் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளை பார்வையிட அறிவுரை
காஞ்சிபுரத்தில் பள்ளிகளின் நிலையை பார்வையிட தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதா? மின்கசிவு ஏதேனும் உள்ளதா? என ஆய்வு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிடங்கல் ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
வானிலையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் துல்லியமாக இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “வானிலையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி கணிப்பது? திடீரென மாறி விடுகிறது. வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்
தண்ணீர் தேங்கிய பழைய வீடியோக்களை பரப்பி வருகின்றனர். மக்கள் பாதுகாப்பாக உள்ளனர், தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது தலைநகரம் தத்தளிக்கவும் இல்லை. தப்பிக்கவும் இல்லை. நிம்மதியாக உள்ளது" என்று அவர் கூறினார்.
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் ஏற்கெனவே 47 செ.மீ. மழை பதிவான நிலையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது.