வேகமெடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இன்று புயலாக உருவாகிறது
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
நேற்று மாலை நிலவரப்படி, அது நாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென் கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே-தென் கிழக்கே 650 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. அதன்படி, 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 670 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 580 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 470 கி.மீ தொலைவிலும், திரிகோணமலையில் இருந்து 190 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (வியாழக்கிழமை) கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த மழை வருகிற 1-ந் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.